சென்னை:
தமிழக அரசியல் நிலைமை, கொரோனா தொற்று தடுப்பு, முதல்வரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக காணொலியில் பேசிவருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சியில் நிகழ்த் திய உரை:
கொரோனா நோய்த்தொற்று ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பரவிய தொடக்க நிலையில் இருந்து - இன்றுவரை தமிழக அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு கருதி, நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை நான் வழங்கி வருகிறேன். அதிமுக ஆட்சியில் இருந் தாலும், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்கிற கடமை உணர்ச்சியுடன் அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி வந்தேன்.
நோயைக் கட்டுப்படுத்தவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் வந்தவர்களைக் காப்பாற்றவும் பல ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறேன். ஏராளமான மருத்துவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் அரசுக்குச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.ஊரடங்கு காலம் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக் களுக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், இதில் எதையுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்கவுமில்லை, செய்யவுமில்லை. இப்படி ஆணவமாக நடந்து கொண்டதால்தான் தினமும் 2000 - 2500- 3000 - 3500 என்று கூடிக்கொண்டு போகிறது. தினமும் 50 பேர் இறக்கிறார்கள்.
சமூகப் பரவல் ஆகிவிட்டது என்று தனியார் ஆங்கில நாளேடு இதழில் மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜான் பேட்டியளித் துள்ளார். பல மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால் சமூகப் பரவல் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறார் முதல்வர். வெறும் வார்த்தை விளையாட்டை வைத்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!என்னுடைய ஆலோசனைமட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதல்வர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால் தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண் டியதாயிற்று. இந்த ஒட்டுமொத்த பேரழிவுக்கும் ஒரே ஒரு ஆள் காரணம் என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் முறையாக அமல் படுத்துங்கள் என்று சொல்லி வந்தேன். தளர்வு, தளர்வுக்கு மேல் தளர்வென்று ஊரடங்குச் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்கினார்கள்.மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என்றார், இப்போது மூன்று மாதமாக ஒழிக்க முடியவில்லை என்றதும், ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று அகலமாகக் கையை விரித்துவிட்டார்.ஏப்ரல் 16-ம் தேதி, கொரோனா மூன்று நாளில் ஒழிந்து விடும் என்று இவரே எப்படிச் சொன்னார்? வாய்க்கு வந்தபடி, சவடால் விடுவதுதான் அவரது வழக்கம். எதுவுமே நடக்கவில்லை என்றதும், ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்.சென்னையில் ஒரு இன்ஸ் பெக்டர் இறந்தாரே, அது உங் கள் தோல்வியா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலருக்கும்- ஏன், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் கொரோனா என்று செய்தி வந்ததே- அது உங்கள் தோல்வியா?
கொரோனா வீரர்களாகக் களத்தில் நிற்கும் 1500-க்கும் மேற் பட்ட காவலர்களும், 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - செவிலியர்களும், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்களும் கொரோனா நோய்த் தொற்றிற்கு உள்ளாகியிருக்கிறார்களே- அது உங்கள் நிர்வாகத் தோல்வியா?சமூகப் பரவல் இல்லை என்றால், தினமும் ஏன் தொற்று அதிகமாகி வருகிறது? சென்னையில் பரவலைக் கட்டுப்படுத்த என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்? மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விசாரிக்க அமைத்துள்ள கமிட்டிகளின் அறிக்கைகள் எங்கே?எதிர்க்கட்சிகளோடு கலந்து பேச மறுப்பது ஏன்? பொருளாதாரத் திட்டங்கள் என்னென்ன?- என்று கேட்டேன். எதற்குமே இதுவரை பதில் சொல்லவில்லை பழனிசாமி. ஏனென்றால் அவரிடம் பதில் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.