மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கு 1. 1.2019 முதல் மூன்று விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து, அதனடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத் தொகையைப் பெற்று விட்டனர். பொதுவாக அகவிலைப்படியை மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு அறிவித்தவுடன் அதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அறிவிப்பது தமிழக அரசின் நடைமுறை வழக்கமாகும். ஆனால், இந்தமுறை மத்திய அரசு ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு மார்ச் இறுதியிலாவது வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் கால விதிமுறைகள் அமலிலிருந்தாலும் அகவிலைப்படி உயர்வினை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கிய நடைமுறைகள் ஏற்கெனவே இங்குள்ளது. அதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதை இவ்வரசாங்கம் காரணமாகச் சொல்லி அகவிலைப்படி நிலுவையைத் தராமல் இருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஊதிய மாற்ற முரண் பாடுகளினாலும், ஊதியமாற்ற நிலுவைத் தொகை இழப்பினாலும், மேலும் ஒன்பது அம்ச கோரிக் கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி அதன் காரணமாக ஏற்பட்ட சம்பள இழப்பின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு, முறையாக இவ்வரசாங்கம் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கானது ஜனநாயக முறைப்படி செயலாற்றும் அரசாங்கம் செய்யக் கூடிய காரியமல்ல.
தங்களது நியாயமான கோரிக் கைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களை இந்த அரசு இன்னும் எதிரிகளாகப் பார்ப்பதாகவே இந்த அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாகக் கருத வேண்டியுள்ளது. ஊதிய மாற்றத்திற்கு, ஊதிய மாற்ற நிலுவைக்குக் கஜானாவில் பணமில்லை என்ற இந்த அரசுதான் தேர்தலுக்கு முன்பு புயல் நிவாரண நிதிக்காக ஒவ் வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2000 வழங்குவதாக அறிவித்தது. ஆனால், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் என்று வந்து விட்டால் மட்டும் பஞ்சப்பாட்டு பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. வழக்கமாக வழங்க வேண்டியதை வழங்காத அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினால் என்னுடைய ஆட்சியில்தான் இத்தனை போராட்டங்கள் என்கிறார் முதல்வர். நியாயப்படியான உரிமைகளைக்கூடத் தட்டிப்பறித்தால் போராடுவதைத்தவிர வேறு வழி ஏது அரசு ஊழியர்களுக்கு? நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமும் நடக்கிறது என்றால் அதற்கு இந்த அரசாங்கத்தைத் தவிர யார் காரணமாக இருக்க முடியும்? ஒரு வேளை தேர்தல் முடிவுகளுக்காக அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் இருக்கிறார்களோ என்ற சிந்தனை ஓட்டம் எழுந்தால் அது ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பய உணர்வின் வெளிப்பாடேயன்றி வேறென்ன வாக இருக்க முடியும்? தமிழகத்தின் ஒவ்வொரு பொதுஜனமும் சட்டப்படி கடமையாற்றத் தவறுகின்ற ஆட்சியைச் சகிப்பதா அல்லது ஜனநாயக நெறிகளை மதிக்காத ஆட்சியாளர்களைப் பார்த்துச் சிரிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு புதிய வகையிலான சலுகைகளோ, உரிமைகளோ வழங்கப்பட்டு அதை தரமறுத்து மறுதலிப்பதிலாவது இது ஏதோ அரசின் கொள்கை முடிவு, நிதி ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் தாமதம் என்று அனுமானிக்கலாம். ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வானது எப்போதும் மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கக்கூடிய வழக்கமான அம்சம் என்பதையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசு ஏற்கெனவே செய்திருக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் அதை இழுத்தடித்து மீண்டும் அரசு ஊழியர்-ஆசிரியர்களைப் போராட்டக் களத்திற்குத் தள்ளுவதானது அரசின் கொள்கை முடிவாக அல்ல கோமாளித்தனமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவையை 1.1.2019 முதல் உடனடியாக வழங்க அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வ தோடு, ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நான்கு மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையைத் தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட வேண்டுமென்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.இதை உடனடியாக அறிவிக்காத நிலையில், தமிழக அரசின் வஞ்சகப் போக்கை வெஞ்சினம் கொண்டு கண்டித்தும் உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் அரசு ஊழியர் சங்கம் மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு விண்ணதிர வீரமுழக்கமிடுவர்.