tamilnadu

புதிய மருத்துவக் காப்பீட்டில் அரசு ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூன் 16- புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்க  வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின்  பொதுச்செயலாளர் ஆ.செல்வம்  முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவின் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் 300க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைமைச் செயலகத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். கொரோனா தொற்றை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில்  சேர்த்து மக்கள் இலவசமாக  சிகிச்சை பெற  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அதேபோன்று அரசு  ஊழியர்களு க்கும், ஆசிரியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்  கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த திருச்சி மாவட்ட த்தை சேர்ந்த ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு மட்டும்  அரசு அறி வித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பணிக்கு வரும் போது உயிரிழந்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சுகாதார ஆய்வாளர் சவுண்டையன், தருமபுரி மருத்துவக் கல்லூரி செவிலியர் குமுதா, திருச்சி மாவட்ட வருவாய் ஆய்வாளர் சேகர், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார ஆய்வாளர் என்.பிரபு, காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்ச் செல்வி, பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லா, நீலகிரி மாவட்டம் தெங்குமராட்டா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயமோகன், சென்னை மருத்துவக் கல்லூரி ஆய்வக நுட்பனர் தீன தயாளன்  ஆகியோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தர வேண்டும், முககவசம், மாத்திரைகள், கபசுர குடிநீர் அடங்கிய ஆரோக்கியப் பெட்டகத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.