tamilnadu

img

தமிழக ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்.... இன்று முதல் விநியோகம்

சென்னை:
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முகக்கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.இந்நிலையில் ரேசன் கடைகளில் இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை (ஜூலை. 25) தொடங்கி வைக்கிறார்.ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. ரூ.13 கோடியே 48 லட்சம் மறுபயன் பாடு துணி மாஸ்க்குகள் வழங் கப்பட உள்ளன.

நெறிமுறைகள்
பாதுகாப்பாக மாஸ்க்குகள் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முகக்கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப் படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் இதுகுறித்து ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனையக் கருவிகளில் (பிஓஎஸ்) உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படுவது குறித்து, அவரவர் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் போது முகக்கவசங்கள் தொடர்பாகவும் பிஓஎஸ். எந்திரத்தில் உரிய பதிவுகள் செய்தே வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.