tamilnadu

நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் இலவச உணவு...  

சென்னை:
கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலங்கள் வரும் 21-ம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் சேகர் பாபு செவ்வாயன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்குப் போராடி வரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, ஆணையிடப்பட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதானமைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

தற்போது கொரோனா நோய்த்தொற்றுஅதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும்14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.இக்காலகட்டத்திலும் திருக்கோயில் கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது”.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.