சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 381 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக சனிக் கிழமை (ஜூலை 4) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்நாட்டினார்.
இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 381 கோடியே 76 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. அதில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடுஅரசு 40 விழுக்காடு பங்களிப்பாக 186 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கும்.அதில் முதல்கட்டமாக தமிழ்நாடு அரசால்110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால்50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 132 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 182 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் சி.வி. சண்முகம்,விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.