முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி காலமானார்
புதுச்சேரி, ஜன.18- சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற மேனாள் நீதி அரசர் தாவீது அன்னுசாமி (வயது-99) காலமானார். புதுச்சேரி மக்களின் சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர். இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்ந்து பயணித்தவர். தொழிலாளர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பேராசிரியராக தனது சமூக பணியை துவங்கி புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதி அரசராக பதவி உயர்வு பெற்று பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராக பொறுப்பு வகித்தவர் தாவீது அன்னுசாமி. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் புலமைப் பெற்ற சட்ட அறிஞராகவும் திகழ்தவர். புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த அவர் சில நாட்கள் உடல் நலம் குன்றிய நிலையில், கனகசெட்டி குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேனாள் நீதி அரசர் தாவீது அன்னு சாமி (வயது-99) சனிக்கிழமை (ஜன-17) காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி பின்னர் வேறொரு தேதியில் நடைபெறும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி புதுச்சேரியின் சமூக நல்லிணக்க ஒற்றுமைக்கு பாடுபட்ட நீதி அரசர் தாவீதுஅன்னுசாமி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அன்னாரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
