tamilnadu

img

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர்...

சென்னை:
தமிழ்நாட்டில் 50,000 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ் நாடு அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50,000 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 34, 78,88,950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், 17.3.1999 அன்று தமிழ் நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் 15 தனிநலவாரியங்கள் உருவாக்கப் பட்டன.

மேலும், அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் கலைஞரால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.அமைப்புசாராத் தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பதிவுசெய்தல், புதுப் பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டதுடன், 15.9.2009 முதல் இணையதளம் வாயிலாக அமைப்புசாராத் தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாகவும் வழிவகை செய்யப்பட்டது.விழாவில் தமிழக முதல்வர், 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுசெய்துள்ள 50,000 தொழிலாளர்களுக்கு, 10 கோடியே 69 லட் சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக 24 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.