சென்னை:
தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தையல் கலைஞர்களுக்கு மாதாந்திர ஒய்வூதிய தொகையை மூன்றாயிரமாக உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு தையல்கலைஞர்கள் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தையல்கலைஞர்கள் சம்மேளன (சிஐடியு) மாநில தலைவர் பி.சுந்தரம், பொது செயலாளர் எம்.ஐடாஹெலன் ஆகியோர் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:
நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் கொரோனா காலத்தில் 60 வயது பூர்த்தி செய்த தொழிலாளர்களை கணக்கிட்டு ஒய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பயன்களையும் இரட்டிப்பாக்கி வழங்கிட வேண்டும். தையல்தொழிலையும், தொழிலாளர்களை யும் பாதுகாக்க கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர் நலநிதியம் போல் தையல் தொழிலாளர்களுக்கும் நலநிதியம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல வாரியத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ளஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை களைந்து பதிவையும் புதுப்பித்தலையும் நல உதவிகள் பெறுவதையும் எளிமைபடுத்த வேண்டும். முறையாக தொழிலாளர் துறையில் தணிக்கை கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு பதிவிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், பண பயன்கள் அனுப்ப அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கான ஊதியத்தை வருடா வருடம் 5 சதவிகிதம் உயர்த்தி வழங்க ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாணைப்படி கூட்டுறவு தையல்உறுப்பினர்களுக்கு பின்காலத்திற் கான ஊதியத்தையும் கணக்கீடு செய்து வழங்கிட வேண்டும். இத்தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு கோட் தைப்பதற்கான நியாயமான கூலியை உடனடியாக நிர்ணயம் செய்திட வேண்டும்.