tamilnadu

img

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.317 கோடியில் சிறப்புத் திட்டங்கள்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு....

சென்னை:
தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இலங்கையில் 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் வசித்து வருகிறார்கள். இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்தன. மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் திண்டாடினார்கள். எனவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு நல உதவிகளை வழங்கவும் முடிவு செய்த  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் ரூ. 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் ரூ. 6 கோடி என ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  ழிற்கல்வி படித்துவரும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். 

விலையில்லாமல் அரிசி- சமையல் எரிவாயு 
இலங்கை தமிழர்களின் குடும்பத்தின ருக்கு விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இலங்கைத் தமிழர்கள் முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7, 469 வீடுகள், ரூ.231.54 லட்சம் செலவில் புதிதாகக்கட்டித்தரப்படும்.  முதற்கட்டமாக 3, 510 வீடுகளுக்கு ரூ. 109 நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

வேளாண், வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல்5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்.அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்புப் பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்களுக்கு பாலிடெக்னிக்  படிப்பிற்கு ரூ. 10 ஆயிரம், இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு ரூ. 12 ஆயிரம், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு ரூ. 20 ஆயிரம் என்று  உயர்த்தி வழங்கப்படும்.முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். மாதந்தோறும் வழங்கப்படும்பணக்கொடை தொகை குடும்பத் தலைவருக்கு ரூ. 1,500, இதர பெரியவர்களுக்கு ரூ. 1,000  மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்குப் பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790  ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 250 ரூபாய்மதிப்பில் 8 வகையான சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க இயலாத நிலையில், 1,296 ரூபாய்மதிப்பில் சேலம் உருக்காலை நிறுவனம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அதிமுகவை தவிர அனைத்து கட்சித் தலைவர்களும் வரவேற்று பேசினர்.

சிபிஎம் எம்எல்ஏக்கள்
“தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள்முகாம்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், இலங்கை தமிழர்அகதிகளின் குழந்தைகள் கல்வி பெறு வதற்கும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தமிழக அரசும் முதலமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தொடர்பாக ஆக.24 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுகொடுக்கப்பட்டதாக சட்டமன்ற குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி, கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம். சின்னதுரை ஆகியோர் தெரிவித்தனர்.