சென்னை, ஏப்.21-மதுரையில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் அதிகாரிகள் சென்றது தொடர்பாக விரிவான விசாரணைஅறிக்கை கிடைத்தும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகுகூறினார்.இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மதுரை மக்களவைத் தொகுதியில், உதவி தேர்தல் அதிகாரியின் கீழ் பணியாற்றியவர் வணிக வரித்துறையை சேர்ந்தஅதிகாரி சம்பூர்ணம். இவர், வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான ஸ்டோரேஜ் அறைக்கு சென்று (சீல்,மை, பேப்பர்ஸ் போன்றவை வைக்கப்பட்டிருக்கும்) சில ஆவணங்களை பார்த்துள்ளார். இதுகுறித்த புகார் வந்தவுடன், மாவட்ட ஆட்சியரிடம் விரிவான விசாரணை நடத்த கோரியிருந்தேன்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட அறிக்கை கொடுத்துள்ளார். அதில், சம்பூர்ணத்தை தற்காலிகபணி நீக்கம் செய்துள்ளனர். விவிபேடு, இவிஎம் மெஷின்வைத்துள்ள ஸ்டராங் ரூம்க்குள் யாரும் செல்லவில்லை. தபால் ஓட்டுகள் ஸ்டோரேஜ் ரூமில் இருக்க வாய்ப்பில்லை. அது தனியாக மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் ஸ்ட்ராங்ரூமில் இருக்கும்.இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பூர்ணம் அனுமதி பெற்று சென்றாரா? அவருடன் சென்றவர்கள் யார்? சம்பூர்ணத்திற்கு உத்தரவிட்டது யார்? என்பது உள்ளிட்ட அம்சங்களை விசாரிக்க கோரியுள்ளேன்.
மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை
சிபிஎம், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு அளித் துள்ளனர். அதில் சில விவரங்களை தெரிவித்துள்ளனர். அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கிறேன். அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக பதிலளிக்க கோரியிருக்கிறேன். விரிவான அறிக்கை வந்ததும் மாவட்ட ஆட்சியரை மாற்றுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கப்படும். உரிய அனுமதி இன்றி அனுமதித்த காவலர்கள் உள்ளிட்ட சம்பந்தப் பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை
தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 8 மையங்கள், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஒன்று, கடலூர் மாவட்டத்தில் ஒரு மையம் என 10 மையங்களில் மறுத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் நீக்கம் குறித்து ஆய்வு
கன்னியாகுமரியில் அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பான சிறப்பு விசாரணை அறிக்கைகோரியிருக்கிறோம். வாக்குப்பதிவு மையம் வாரியாக எவ்வளவு பேர் புகார் கொடுத்துள்ளார்கள், நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியரை வைத்து ஆய்வு செய்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.