tamilnadu

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் திமுக எதிர்க்கும்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை:
நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர்  4 வெள்ளியன்று ‘சூழலியலைத் தகர்க்கும் சட்டம்’ என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை - 2020 குறித்த கருத்தரங்கம் காணொலிக்காட்சி  வாயிலாக நடைபெற்றது.இக்கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், சூழலியல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல்செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா மற்றும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் கோ.சுந்தர் ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக செய்தித் தொடர்பாளர்களும்  இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை தனியார்மய மாக்கலுக்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் குறுக்கீடு இல்லாமல் நமதுஇயற்கை வளங்களைச் சுரண்டும் .அரசு நிர்வாகத்தின் தலையீடு குறைந்து தனியார் தங்கள் விருப்பம்போல தடையில்லாமல் செயல்படும் நிலை ஏற்படும். ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் அதுகுறித்து புகார் கொடுக்க அரசு அதிகாரிகளுக்கும், திட்ட ஆதரவாளர்களுக்கும் மட்டுமே உரிமை உண்டு. பொதுமக்களுக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

மாநிலச் சுற்றுச்சூழல் அதிகாரிகளை மத்திய அரசு நியமிப்பது மத்திய அரசே முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாகும்.  இது மாநிலஉரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையாகும்.இந்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகஉள்ளது. அதனால் தான் எதிர்க்கிறோம். நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் சட்டவரைவு வைக்கப்பட்டு இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது திமுகவின் நிலைபாடாகும்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக நமது திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கும், சூழலுக்கும் ஏதுவாக கொள்கைகளை வகுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுஅறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.