சென்னை:
மின் கட்டணக் கணக்கீட்டு முறை செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. பொதுமக்கள் வெளியில் வராமல் வீடடங்கும் நிலை ஏற்பட்டது. மின்வாரியம் மின் கணக்கீடுசெய்யும் பணியை ஒத்திவைத்து, முதல் இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தைக் கடந்த மாத அடிப் படையில் வசூலிப்பதாகத் தெரிவித்தது.பின்னர் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டபோது 4 மாத மின் கட்டணம் கணக்கிடப்பட்டது. அதில் முதலில் கட்டிய கட்டணத்தைக் கழித்துவிட்டு 4 மாத மொத்தக் கணக்கீட்டின் படி மீதமுள்ள தொகை வசூலிக்கப்பட்டது.நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதை இரண்டு இரு மாதங்களுக்கு எனப் பிரித்து வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்து வசூலித்தது. இது பொதுமக்களைப் பாதிக்கும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
மின் வாரியத்தின் இந்தக் கணக்கீட்டு முறையை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்குப் பதில், மின் பயன்பாட்டு யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.இந்த வழக்கில் தமிழக அரசு, “முறையாக மின் பகிர்மான வழிகாட்டுதலின்படியே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எவ்வித விதிமீறலும் இல்லை. இரண்டு மாதங்களிலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது’’ என்று பதில் அளித்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, தமிழக அரசின் மின் கணக்கீட்டு நடைமுறையில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘‘இந்திய மின்சாரச் சட்ட விதி 45(3)இல் குறிப்பிட்டபடி மின் உபயோக அளவீட்டுப்படியே கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்பட்ட வேண்டும். இப்போது வசூலிக்கப்பட்ட கட்டணம், உபயோகப்படுத்திய மின் யூனிட்டை விட அதிக யூனிட்டுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.100 யூனிட் தள்ளுபடி என்பது ஏற்கெனவே உள்ள விதிகளின்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்’’ என எதிர்பார்க்கப்படுகிறது.