tamilnadu

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் கிடையாதா?: மின்சார வாரியம் விளக்கம்

சென்னை,டிச.2- தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்க ளும் வரும் 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரவாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி ஆணை வெளியிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் செல்வோருக்கும்  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனையடுத்து வரும் 7ஆம் தேதிக்குள்  அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம்  வழங்க ப்படாது  என மின்சார வாரிய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  மின்சார வாரிய உத்தரவால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படும் என்று மதுரை மண்டல  தலைமை பொறியாளர் உமாதேவி  விளக்கம் அளித்துள்ளார்.