சென்னை, ஏப். 12 -மோடியின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் குற்றம் சாட்டினார்.தென்சென்னை திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் விருகம்பாக்கம் பகுதிசார்பில் வியாழனன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகரில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி பங்கேற்ற இந்தக்கூட்டத்தை நடத்த தேர்தல் அதிகாரிகள் கடும் கெடுபிடி செய்தனர். அதனையும் மீறி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய ஏ.பாக்கியம், “ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் 30 விழுக்காடு வாக்கு பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறர். மேற்கு திரிபுராவில் வாக்களிக்க விடாமல் பாஜக-வினர்தடுத்துள்ளனர். துணை ராணுவப்படை அங்கு செல்லவில்லை. தேர்தல் ஆணையம் வேடிக்கைப்பார்க்கிறது. மோடியும், அமித்ஷாவும் விருப்பப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. எனவேதான் 66 ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பிக்கை தகர்ந்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்றார்.ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை வைத்து தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற பாஜக, அதிமுக அணிமுயற்சிக்கிறது. அதனை முறியடித்துபாஜகவையும், அதிமுகவையும் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவோம். தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அவை அனைத்தையும் முறியடிப்போம். சிபிஎம் பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் கே.கண்ணன், மு.ராசா, தலைமைக்கழக பேச்சாளர் சைதைசாதிக், மதிமுக மாவட்டச் செயலாளர் ப.சுப்பிரமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சுசீலாகோபாலகிருஷ்ணன், விசிக பகுதிச் செயலாளர் செ.கரிகால்வளவன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தன், டி.விஜயகுமாரி உள்ளிட்டோர் பேசினர்.
அடையாறு
வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் அடையாறில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமை தாங்கினார். அரசியல தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் (திமுக), ஏ.பாக்கியம் (சிபிஎம்), சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர சுசீலா, பகுதி செயலாளர்கள துரைகபிலன் (திமுக), செல்லபாண்டியன் (மதிமுக), சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் கி.தமிழ்ச்செல்வன், ஏ.அனிபா, பி.முரளிதரன் உள்ளிட்டோர் பேசினர்.