சென்னை, மே 30-கோடை வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக கூடுவாஞ்சேரி பெரிய ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் விடப்படுகிறது. இதனால் ஏரியை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறும் நிலை ஏற்படும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில், எப்போதும் தண்ணீர் வற்றாது. இதனால் ஏரியின் தண்ணீரை நம்பி விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனர். தற்போது, கோடை வெப்பம் மற்றும்அனல் காற்றால் கூடுவாஞ்சேரி பெரிய ஏரி வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, கழிவுநீரை ஏரியில் திறந்து விடுகின்றனர். இதனால் ஏரியில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இதற்கிடையில், பெரிய, ஏரியில் பல லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடைபெற்றது. அப்போது, ஏரியின் மதகு மற்றும் ஏரிக்கரையை மட்டும் சீரமைத்தனர். ஆனால், ஏரியை தூர்வாரவில்லை. தற்போது, ஏரியில் கழிவுநீர் கலந்து வருவதால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், சீரழிந்து காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்கூறியும் கண்டும் காணாமலும் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.