சென்னை:
நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை கைவிடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கங்களின் மாநில செயலாளர்கள் எஸ்.பாலா, வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய பிஜேபி அரசு தமிழக மாணவர்களின் மீது திணித்துள்ள நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நசுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையால் அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடிந்தது.ஆனால், நீட் தேர்வு இத்தகைய மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகளை பறித்துள்ளது. தங்கள் கனவு நசுக்கப்பட்ட துயரத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அத்தீர்மானத்தை மத்திய அரசு குப்பைக்கூடையில் தள்ளியுள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கு மட்டுமின்றி அனைத்து உயர்கல்விக்கும் தகுதித் தேர்வுகளை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை அமலாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ வாபஸ் பெறுவதுடன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும்.
மேலும், ஆட்சிக்கு வருவதற்காக ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றவர்கள் இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக என்று சொல்லி அமலாக்கப்பட்ட ஊரடங்கால் 12 கோடிபேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டிய மத்திய, மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமின்றி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் தடை விதித்துள்ளது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய், கல்வியை மாநிலப்பட்டியலில் இணைத்திடு, புதிய கல்விக் கொள்கையை கைவிடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாளை(15-09-2020) தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடைபெறவுள்ளது.