சென்னை, மே 28-சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக-வும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க பேரவை செயலகத்திடம் திமுக தெரிவித்திருந்தது. இதற்கு பேரவைத் தலைவர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.இதனையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் பேரவைத் தலைவர் தனபால் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக செவ்வாயன்று(மே28) பதவி ஏற்றுக் கொண்டனர். பேரவைத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தற்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண் ணிக்கை 101 ஆக உயர்ந்துள் ளது.இந்த நிகழ்ச்சியில் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, அண்ணா அறிவாலயம் சென்ற 13 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஸ்டாலின் பேட்டி
திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பிறகு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்று கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று மற்றொரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, சட்டப் பேரவை கூடும் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.