கடலூரில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கடலூர்,
மார்ச் 19- கடலூர் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வாயிலாக வழங்கப்படும் சேவைகள் குறித்து களஆய்வு மேற்கொண்டார். கடலூர் ஆல்பேட்டையில் அங்கன்வாடி மையம், மஞ்சக்குப்பத்தில் முதல்வர் மருந்தகம், மஞ்சக்குப்பம் மற்றும் செம்மண்டலம் பகுதியில் நியாய விலைக் கடை கள், தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டுமான பணிகள் உள்ளிட்ட திட்டப் பணிகள் மற்றும் அரசின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்தும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சி யர் பலராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி அமைச்சர் அலுவலகங்களில் பேரவைத்தலைவர் சோதனை
புதுச்சேரி, மார்ச் 19- புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி துவங்கியது. 12ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து துறைகள் மீதான மானிய கோரிக்கைகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளில் தலைமைச் செயலர் முதல் அரசு செயலர்,துறை இயக்குநர்கள், அதிகாரிகள் வரை அனைவரும் அவை நடவடிக்கைகளை கவனிக்க சட்டமன்ற வளாகத்தில் இருக்க வேண்டும் என ஏற்கெனவே பேரவைத்தலைவர் செல்வம் உத்தரவிட்டார். அவையில் எழுப்படும் கேள்விகளுக்கு அதிகாரிகள் மூலம் பதில் அளிக்க அரசு செயலர்களும் அதிகாரிகள் அவையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டினை சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தனர். இதனை தொடர்ந்து பேரவைக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவை தலைவர் செல்வம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் புதனன்று அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும் சென்று சோதனையிட்டார்.அவைக்கு வராத அதிகாரிகள் பற்றி கேட்டறிந்தார். சில அதிகாரிகள் வராததற்கான காரணத்தை தெரிவித்திருந்தனர்.காரணத்தை தெரிவிக்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க சட்டமன்ற செயலருக்கு பேரவைத்தலைவர் உத்தரவிட்டார்.
மூடப்பட்ட கிளைச் சிறையில் கோழிக்கறி விற்பனை
கடலூர், மார்ச் 19- கடலூரில் மூடப்பட்ட கிளை சிறைச்சாலையில் புதன்கிழமை முதல் கோழிக்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் கைதிகள் மூலம் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. மேலும் அவை கைதிகள் மூலம் பொதுமக்களுக்கு இறைச்சியாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறைச்சாலை மூடப்பட்டதால், அங்கு கோழி இறைச்சி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதன்கிழமை முதல் கைதிகள் மூலம் கிளை சிறைச்சாலையில் வைத்து கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடை களை காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படு வதால், அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தினந்தோறும் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் என்று சிறை அலுவலர்கள் தெரிவித்தனர்.