மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு என்ற வார்த்தையை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர். முதல்வராகப் பொறுப்பேற்றதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் `ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
ஆனால் பாஜக உள்ளிட்ட சங் பரிவார அமைப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ``இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்” என சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார், ``இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து சட்ட மன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்தது என்பது தான் அதன் பொருள். ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை . ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது; அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம். பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வரும் மற்ற அமைச்சர்களும் இவ்வாறு பேச வேண்டும் என்று உத்தரவிட முடியாது. அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது