tamilnadu

img

அதிமுக-பாஜக அணியை புறக்கணியுங்கள் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்

சென்னை, ஏப். 4- அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்களும் மாற்றுத்திறனாளிகளும் புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.நம்புராஜன், பி.மனோகரன், தீபக் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக எங்களை “திவ்யா ஜெம்” அதாவது தெய்வாம்சம் பொருந்தியவர்கள், தெய்வப் பிறவிகள் என பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆனால் தெய்வப் பிறவிகள் என அறிவித்தது. மறுபுறம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது மத்திய பாஜக அரசு. 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை.அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங் களையும், சட்டப்படியான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கூட பாஜக அரசு வழங்க மறுத்தது. 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதியிலேயே வேலை வழங்க வேண்டும். ஆனால், மோடி அரசு அந்த திட்டத்தையே ஒழிக்க முயற்சிக்கிறது. ரயில் பெட்டிகளிலிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகளை படிப்படியாக அகற்றி விட்டது மோடி அரசு.


கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் கடுமையான பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்கள். மதக் கலவரமோ, போரோ மூண்டால் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உருவாவார்கள். ஆனால் பாஜக அரசு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, போர் நடத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பார்க்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள், சட்ட விதிகளையும் கூட அமல்படுத்த மறுக்கிறது அதிமுக அரசு. அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களில் 20 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால் அதிமுக அரசு அதையும் கொடுக்க மறுக்கிறது. மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் அரசிடமும் இல்லை. தேர்தல் ஆணையத்திடமும் இல்லை. எனவே, வரும் மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும், அதிமுக பாஜக கூட்டணியை தமிழக மக்களும், மாற்றுத்திறனாளிகளும் புறக் கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு கூறினார்கள்.இச்சந்திப்பின் போது ஜமால் அலி, கரிமெல்லா சுப்பிரமணியம், ஐஸ்வர்யா ராவ், கோட்டிஸ்வர் ராவ், தமிழ் இயலன், வி.நடராஜன், கணேஷ் முத்துசாமி, எஸ்.ரபீக் அகமத், பி.எஸ்.பாரதி அண்ணா, சி.கே.மனோ ரஞ்சனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.