சென்னை:
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி வெள்ளியன்று (ஆக.27) மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மையங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தினர்.
தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் (தெலுங்கானாவில் ரூ.3,016 வரை) உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் ஊனமுற்றோருக்கு 3,000 ரூபாயும், கடும் ஊனமுற்றோருக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயும் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கவில்லை. எனவே, உதவித் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருவாய் துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணியும், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜனும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தியும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் ஆலடிப்பட்டி மற்றும் ராமசாமிபட்டி கிராமங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பி.ஜீவாவும் கலந்து கொண்டு பேசினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 74 மையம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 63 மையம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 52 மையம், சென்னையில் 11 மையம் என தமிழகம் முழுவதும் சுமார் 500 மையங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை புதனன்று (ஆக.25) 3 ஆயிரத்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.