tamilnadu

img

மலைவேடன் மக்களுக்கு இனச்சான்று வழங்க திட்டமிட்டே மறுப்பு... மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத திண்டுக்கல்,பழனி வருவாய் கோட்டாட்சியர்கள்....

சென்னை:
 மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், மலைவேடன் மக்களுக்கு இனச்சான்று வழங்க திண்டுக்கல்,பழனி வருவாய் கோட்டாட்சியர்கள் திட்டமிட்டே மறுத்து வருவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள்சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்றஉறுப்பினருமான பி.டில்லிபாபு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாநில மனித உரிமைகள்ஆணையத்தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரம் வருமாறு:

தமிழ்நாட்டில் இந்து மலைவேடன் பழங்குடியினர் 1977- ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 27.7.1977 முதல் ஜனாதிபதி அறிவிக்கை மூலமாக தமிழ்நாடுமுழுவதும் மலைவேடன் இனம் பழங்குடியின மக்கள் வசிப்பதாக அறிவிக்கை செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் அரசாணை எண் 1773 நாள் 23.6.1984 இல் வரிசை எண் 22-ல் வகைப்படுத்தப்பட்டது. திண்டுக்கல், மதுரை, தேனிமற்றும் நீலகிரி உட்பட மலைவேடன் பழங்குடியினம் 48 கிராமங்களில் வசித்து வருகின்றனர்.பழங்குடி மக்களுக்கு மதுரை மாவட்டத்தில் மேற்கண்ட அரசாணைப்படி, 1983ம் வருடம்நிலக்கோட்டை வட்டத்தில் பழைய வத்தலகுண்டு கிராமத்தில் பெறப்பட்டது. 

1989ம் ஆண்டு வரை வருவாய் வட்டாட்சியர்களால் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அரசாணை எண். 2137 (ம) 11.11.1989 தேதிக்கு பிறகு தமிழகத்தில் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பழங்குடியினருக்கான சாதிச்சான்றிதழ் வழங்கிடும் அதிகாரிகளும், மேற்கண்ட அரசாணைப்படி உத்தரவிடப்பட்டு, இனச்சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.மதுரை மாவட்டத்தில் இன்றுவரை, வருவாய் கோட்டாட்சியர்கள்/ மலைவேடன் பழங்குடிஇனச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் (மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு 1985) திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர்கள் மலை வேடன் பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் தர திட்டமிட்டே மறுத்து வருகின்றனர்.கடந்த 2016ம் வருடம் நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருந்த போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் வத்தலகுண்டு, பரசுராமபுரம், பழையவத்தலகுண்டு, கண்ணாப்பட்டி, மெத்தப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 108 மலைவேடன் மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட திண்டுக்கல் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். அதன்பின்னர் கடந்த 4 ஆண்டுகாலமாக திண்டுக்கல்வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலே நிலுவையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகாலமாக மலைவேடன் இன பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட மறுத்துள்ளது, திட்டமிட்டே மனித உரிமையை பறித்ததாக கருத வேண்டியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு மலைடன் முன்னேற்ற சங்கமும் தொடர்ந்து இன்னும் போராடி வருகின்றது.

கடந்த 5.2.2000 ஆம் ஆண்டில் வழக்கு எண்SHRC 1480 Case No. 1480/RRS/ 99 அன்றையதேதியிட்ட வழக்கின் தீர்ப்பில் திண்டுக்கல்மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் வசிக்கும் மலைவேடன் இனத்தைச் சேர்ந்த 1078 மலைவேடன் இனத்தவர்களுக்கு சாதிச்்சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்டது. இன்று வரை மாநில மனித உரிமைகளின் ஆணையத்தின் தீர்ப்புகள் அமல்படுத்தப்படவில்லை.கடந்த 22.12.2020 ஆம் தேதியன்று இதே திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து இனச்சான்று கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்களை விரைந்து இனச்சான்று வழங்கிட நினைவூட்டி வலியுறுத்தினேன். அன்றைய தினமே  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இதன் தொடர்ச்சியாக இனச்சான்று வழங்கிடகோரி கடந்த 7.1.2021 தேதியன்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்புகாத்திருப்பு போராட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவேடன் பழங்குடி மக்கள் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள் இனச்சான்று கோரி கடந்த 10 ஆண்டுகாலம் 5 ஆண்டு, 2 ஆண்டுகாலமாக விண்ணப்பித்தும் இதுவரை இனச்சான்றிதழ் அளித்திடாத வருவாய்கோட்டாட்சியர்/ சாராட்சியர் விபரங்களையும் இணைத்து அவர் மனு அளித்துள்ளார்.