சென்னை, ஏப்.18-ஏப்ரல் 18 வியாழனன்று பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் அருண் மொழிப்பேட்டை யில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தொடங்க 4 மணி நேரம் தாமதமானது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது.சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது. குரோம்பேட்டை புனித மார்க்ஸ் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள் ளன. இயந்திரத்தில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பாகவே 77 வாக்கு கள் பதிவாகிவிட்டதால் அவற்றையும் சரிகட்டி இயந்திரத்தை சரிசெய்ய தாமதமாகிவிட்டது. இதனால் வாக்குப்பதிவிலும் தாமதம் ஏற்பட்டது.மேலும் நெல்லை கோடீஸ்வரன் நகர், நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் அரண்மனைபுதூர், காட்பாடி எல்ஜிபுதூர், பெரியகுளம் செவன்த் டே பள்ளி, நாகையில் உள்ள 151வது வாக்குச்சாவடி, கோவை சித்தாபுதூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பொள்ளாச்சி கோட்டூர் சாலை பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், நான்டெட், ஹிங்கொலி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அம்மாநில காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் 33 புகார்களை பதிவு செய்துள்ளது. அலோக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒரு நபர் சேதப்படுத்தி யுள்ளார். தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.