சென்னை:
தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சா.கந்தசாமி ஜூலை 31 வெள்ளியன்று காலை உடல் நலக்குறைவால் காலமான செய்திஇலக்கிய உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:1965-இலிருந்து சிறுகதைகளை எழுதிவந்துள்ள சா.கந்தசாமியின் முதல் நாவலான ‘சாயாவனம்’ 1969இல்வெளிவந்தது. அந்த நாட்களில் இவரது‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்கிற சிறுகதையும் சாயாவனம் நாவலுமே அவரை அடை யாளப்படுத்தும் படைப்புகளாகப் பேசப்பட்டன. காட்டை அழித்துக் கழனியாக்கும் நிகழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சாயாவனம் நோபல் பரிசு பெற்ற உலகப்புகழ்பெற்ற நார்வே நாட்டு நாவலாசிரியரான நட் ஹாம்சன் எழுதிய ’நிலவளம்’ நூலுக்கு நிகராக வைத்துப் பேசப்பட்ட நூல் சாயாவனம்.நவீன இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்ட ‘கசடதபற’ இலக்கிய இதழை நண்பர்களுடன் சேர்ந்துநடத்தினார்.
1940 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1998 ஆம் ஆண்டு ‘விசாரணைக்கமிஷன்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். சூரிய வம்சம், அவன் ஆனது போன்ற நாவல்களும் தக்கையின் மீது நான்கு கண்கள், கிழக்குப்பார்த்த வீடு, சாந்தகுமாரி, மாயவலி, ரம்பையும் நாச்சியாரும்,சொல்லப்படாத நிஜங்கள், பத்ரிநாத், நிறங்களின் நிறம், இரவின் குரல், சாந்தகுமாரி உள்ளிட்ட பத்து சிறுகதைத்தொகுப்புகளும் நீரின்பேரோசை என்கிற கனடா பயண நூலும் நிகழ்காலத்திற்கு முன் என்கிற சுற்றுச்சூழல் பற்றிய நூலும் (இந்நூல் தமிழக அரசின் விருது பெற்றது) அவரது எழுத்துப்படைப்புகள்.பின்னர், ஆவணப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்ட சா.கந்தசாமி இயக்கிய ‘காவல்தெய்வங்கள்’ என்கிற குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரைப் பற்றி ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்ட நாளுக்கு முன்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். புதிய புத்தகம் பேசுதுஇதழில் தொடர்ந்து எழுதிவந்தார்.அவரது மறைவு இலக்கிய உலகுக்குப் பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.