சென்னை:
அருட் தந்தை ஸ்டான் சுவாமி மரணம் என்பது ஒன்றிய பாஜக அரசு நடத்திய படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி யுள்ளார்.
பீமா கோரேகான் வழக்கில்,உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவம், உரிய காலத்தில் பிணை வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அவர் உடல்நலிவுற்று சிறையில் உயிரிழந்தார்.அருட் தந்தை ஸ்டான் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பீமா கோரேகான் உள்ளிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 8 வியாழனன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது.
அதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
தில்லியில் 215 நாட்களை கடந்து போராடிக் கொண்டிருக் கும் விவசாயிகளை அழைத்து ஒன்றிய அரசு பேசாமல் உள்ளது. பொய் வழக்குகளில் கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை, 15 ஆண்டு களுக்கு பிறகு விடுவிக்கின்றனர். பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர். ஒன்றிய அரசு அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. குடிநீர் குடிக்க உறிஞ்சுக் குழாயை கூட கொடுக்க மறுத்துவிட்டது. ஸ்டான் சுவாமி மரணம் பாசிச பாஜக நடத்திய படுகொலை. இதற்கு பொறுப்பான அனைவரையும் நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும்.பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யவேண் டும். பொய் வழக்குகளில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மனித உரிமைகளை மீறுகிற உபா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.எதிர்க்கட்சிகளை, மாற்றுக் கருத்துள்ளோர், மனித உரிமைசெயற்பாட்டாளர்களை ஒன்றியபாஜக அரசு பொய் வழக்குகளில் கைது செய்கிறது. இதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வெடித்துக் கிளம்பும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஒடுக்குமுறையால் மரணம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “ஜோடிக்கப்பட்ட பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவம், உரிய காலத்தில் பிணை வழங்காத மோடி அரசின் ஒடுக்குமுறையால் அவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்திற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். திட்டமிட்ட அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையின் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.தலித், பழங்குடி மக்களை இந்துக்கள் என்று கூறி, இந்து பெரும்பான்மைவாதத்தை திணிக்கிறார்கள். இதற்கு தடையாக உள்ள இடதுசாரிகளை அழிக்க முற்சிக்கின்றனர். மதவாதத்தை, இந்து பாசிசத்தை மூர்க்கமாக எதிர்க்கும் இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம். மோடியே பதவி விலகு என தேசம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் ” என்றார்.
உள்துறை, நீதித்துறையும் பொறுப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், “ஸ்டான் சுவாமி மரணம் இந்திய ஜனநாயகத்தின் மீது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்த மரணத்திற்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் பொறுப்பு உள்ளது” என்றார்.தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பின ர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.