சென்னை:
கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் ஏராளமானோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதால் ரயில் நிலையங்களில் செவ்வாயன்று இரவும் புதனன்றும் பயணிகள் கூட்டம் அலைமோதி
யது. ஆனால் பேருந்து நிலையங்களில் இந்தாண்டு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையம்
பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்று (13-ந் தேதி) முதல் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
எனவே ரயில் நிலையங்களில் கடந்த திங்கட் கிழமை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் புதனன்றும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. இந்த முறை முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அனுமதி இல்லை. எனவே அனைத்து பயணிகளும் முன் பதிவு செய்தே பயணம் செய்தனர். அனைத்து ரயில்களும் நிரம்பி வழிந்தன.
ஒவ்வொரு ரயில்களிலும் முன்பதிவு செய்தவர்களில் 300 பேர் முதல் 500 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் ரயில்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால், பஸ்களில் சென்றனர்.பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்லும் வகையில் பயணம் செய்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் புறப்பட்டு சென்றனர். எழும்பூரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட ரயில்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 நாட்களிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர். அதேபோல் புதனன்று மட்டும் 1 லட்சம் பேர் ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்திருந்தனர். தட்கல் மூலம்ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிறப்பு பேருந்துகள் குறைப்பு
சிறப்பு பேருந்துகள் பொது மக்கள் வசதிக்காகஅறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன.பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. கடந்த 11-ந் தேதி முதல் சென்னை உள்பட தமிழகத்தின்பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் வழக்கமான பேருந்துகள் 4,100 இயக்கப்பட்டன. இதுதவிர 1,660 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செவ்வாயன்று வரை இயக்கப்பட்ட மொத்த பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 264 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். 2,216 சிறப்பு பேருந்துகள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே
பேருந்துகளே இயக்கப்பட்டன.புதனன்று காலை 8 மணி நிலவரப்படி 6,429 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 6,143 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதனன்று வழக்கமான 2,050 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 1,952 சேர்த்து மொத்தம் 4,002 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. நீண்ட தூரம் செல்லக்கூடிய பயணிகள் அதிகாலையிலேயே பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தாண்டு பயணிகள் குறைவு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் முன் பதிவு செய்யமுடியாதவர்கள் கடைசி நேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்தனர். இதனால் புதனன்று பிற்பகலுக்கு பிறகு பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.