சென்னை, ஏப்.15-தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவர்களில் 13 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 802 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்தக் கழகம் ஆய்வு செய்தது. அதில் கிடைத்த தகவல்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, மொத்த வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் பின்னணியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில், 67 வேட்பாளர்கள் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் மீது அதிகபட்சமாக 14 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது 12 வழக்குகள் இருக்கின்றன. மொத்த வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் அதாவது 184 பேர் கோடீஸ்வரர்கள். இதில் அதிமுகவின் 22 வேட்பாளர்களும் பாஜகவின் 5 வேட்பாளர்களும், தேமுதிகவின் 4 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.