tamilnadu

அருங்காட்சியகவியல் துறையை உருவாக்குக... அரசுக்கு ஊழியர் சங்கம் கோரிக்கை..

சென்னை:
பல்கலைக் கழகம் அல்லது அருங்காட்சியகங்களில் அருங்காட்சியகவியல் துறை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அருங்காட்சியக ஊழியர் நல சங்கம் வலியுறுத்தி உள்ளது.இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வெள்ளியன்று (செப்.3) சென் னையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி உள்ளிட்டோர் பேசினர்.

தனித்துறை ஏன் தேவை?
தென்னிந்தியாவில் எந்த ஒரு பல்கலைக் கழகம், அருங்காட்சியகத்தி லும்,அருங்காட்சியகத்திற்கென்று தனிப் பாடத்துடன் கூடிய துறை இல்லை. தமிழக பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத் துறை, தமிழ்த் துறையில் அருங்காட்சியக அறிவி யலை ஒரு பாடமாக மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது.அருங்காட்சியக அறிவியலில் மாணவர்கள் உயர்கல்வி பயில, பேராசிரியர்கள் இதுதொடர்பான அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள போதிய வசதிகள் இல்லை.  எனவே,பல்கலைக் கழகம், அருங்காட்சியகங்களில் அருங்காட்சியகவியல் துறையை உருவாக்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்புக
துறை வாயிலாக, முதுகலை பட்டயப் படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும்.அருங்காட்சியகங்களில் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனடியாக  நிரப்ப வேண்டும், எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள குளத்தை சீரமைத்து மேம்படுத்தி, படகு சவாரி விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்
சங்கத்தின் மாநிலத் தலைவராக ஏ.விஜயா, பொதுச் செயலாளராக எம்.மருதுபாண்டியன், பொருளாளராக எஸ்.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.