tamilnadu

img

பெட்ரோலியப் பொருட்கள் அதிரடி விலை உயர்வு - கண்டன இயக்கத்திற்கு சிபிஎம் அறைகூவல்

பெட்ரோலியப் பொருட்கள் அதிரடி விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட
பொருட்களின் விலை நாளுக்கு நாள் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை குறைந்து
கொண்டே வந்தாலும் கூட இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள்
குறைவதில்லை என்பதோடு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல்.
டீசல் ஆகியவற்றின் மீது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் மிக அதிகமான
வரிகளே இத்தகைய விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாகும்.
கடந்த சில நாட்களாகவே, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலைகள்
தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்று தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
ரூ.92/- ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85/- ஆகவும் உள்ளது. விரைவில் இது
ரூ.100/- ஐ தொட்டு விடும் எனவும் சொல்லப்படுகிறது. இத்தகைய கடுமையான
விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் சூழலில் தான் தற்போது சமையல்
எரிவாயு உருளையின் விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின்
விலை கடந்த டிசம்பர் இறுதியில் ரூ.660/- ஆக இருந்தது. பின்னர் அது படிப்படியாக
உயர்த்தப்பட்டு தற்போது அதன் விலை ரூ.788/- ஆக உள்ளது. அதாவது ஒரே
மாதத்தில் விலை உயர்வு என்பது ரூ.128/- ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறத்தில்
இத்தகைய கடுமையான விலை உயர்வை மக்கள் மீது சுமத்தும் மத்திய அரசு,
மறுபுறத்தில் மானியத்தையும் வெட்டி சுருக்கி விட்டது. உதாரணமாக கடந்த 2019
இல் ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.174/- ஆக அளிக்கப்பட்டு வந்த மானியத் தொகை
வெகுவாக குறைக்கப்பட்டு, தற்போது வெறும் ரூ.24/- ஆக மட்டுமே
வழங்கபடுகிறது. இத்தகைய குறைவான மானியம் கூட பல பயனாளிகளுக்கு
முறையாக அளிக்கப்படுவதில்லை. இத்தகைய நடைமுறை தொடர்ந்தால்
விரைவில் மானியம் முற்றாக நிறுத்தப்படும் ஆபத்தும் உள்ளது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக சலுகைகளை அளிப்பதும்,
சாதாரண ஏழை எளிய மக்களின் சேமிப்பை சூறையாடும் வகையில் பெட்ரோல்,
டீசல், சமையல் எரிவாயு விலைகளை மிகக்கடுமையாக உயர்த்துவதுமான
இரட்டை நிலை என்பதே மத்திய பாஜக அரசின் அணுகுமுறையாக உள்ளது.
இத்தகைய மிக மோசமான அரசின் கொள்கைளை கண்டித்தும், பெட்ரோல், டீசல்,
சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிட வலியுறுத்தியும் வலுவான
போராட்டங்களை நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக்
கொள்வதோடு, கட்சியின் சார்பில் நடைபெறும் இத்தகைய போராட்டங்களுக்கு
மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில செயற்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.