tamilnadu

img

தலைமை தேர்தல் அதிகாரியுடன் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் . ஆறுமுக நயினார் ஆகியோர் இன்று (14.11.2025) தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் போது வாக்காளர்கள் விடுபடாமல் அனைவரையும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையம் உடனடியாக மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்தும் கடிதம் அளிக்கப்பட்டது. அக்கடிதம் பின் வருமாறு:

கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் குறித்த நடைமுறைகளை தேர்தல் அதிகாரிகள் விளக்கிய போது அரசியல் கட்சி சார்பாக பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. பின்னர் நவம்பர் 4, 2025 முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொகுதிகளில் நடைபெற்று வருகின்றன. எல்லா மாவட்டங்களிலிருந்தும் வாக்காளர்கள் பதற்றத்துடன் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுமா என்ற அச்சத்துடன் அரசியல் கட்சிகளை தொடர்பு கொள்கிறார்கள். எனவே, கொள்கை ரீதியாக இந்த முறையில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதை சட்டப்படி எதிர்க்கிற அதே வேளையில் உடனடியாக களத்தில் தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டிய சில விஷயங்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1.  27.10.2025இல் முடக்கப்பட்டிருக்கிற கடைசி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மட்டுமே கணக்கெடுப்பு படிவம் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டு நிரப்பி கொடுக்கப்பட்டு பின்னர் ஒரு பிரதி ஒப்புகைச் சீட்டாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் ஒரு படிவம் மட்டுமே வழங்குகிறார்கள். எனவே, எங்கும் ஒப்புகைச் சீட்டு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

2. 13.112025 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுமார் 80 சதவிகிதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் யாரிடம் கேட்டாலும் எங்களுக்கு படிவம் வரவில்லை என்று சொல்லுகிறார்கள். 80 சதவிகிதம் விநியோகிக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளதால் உடனடியாக மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி தலையிட்டு அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவம் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

3. அந்த குறிப்பிட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெயர்ந்த பல வாக்காளர்கள் தங்களுக்கு புதிய குடியிருப்பு விலாசத்தில் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரினால் அதை அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள்.

4. 2026 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, அன்று 18 வயது நிரம்புகிற வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் கொடுக்க மறுக்கப்படுகிறது.

5. 2002க்கு முன்பு வாக்காளர்களாக இருந்தவர்களினுடைய விபரங்களை ஆன்லைனில் தேடி கண்டுபிடித்து படிவங்களில் நிரப்புவது மிகக் கடினமான பணியாக உள்ளது. பல நேரங்களில் கணிணிகளில் அந்த விபரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட முடியவில்லை. வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளிடமும் இந்த விபரங்கள் இல்லை அல்லது தர மறுக்கிறார்கள். எனவே, படிவங்களை முழுவதுமாக நிரப்பித் தருவது சாத்தியமற்றதாக உள்ளது.

6. 2002க்கு முன்பு வாக்காளர்களாக இருந்தவர்களினுடைய தாய், தந்தை, உறவினர்கள் பற்றிய விபரங்கள் பெரும்பாலும் இந்த பட்டியலில் கிடைப்பதில்லை. எனவே, படிவத்தின் இரண்டாவது, மூன்றாவது பத்திகள் நிரப்பப்படுவது நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது.

7. கணக்கெடுப்பு படிவத்தில் புதிய இடங்களுக்கு மாறியிருப்பவர்கள் அந்த விலாசத்தை எழுதி மாற்றிக் கொள்வதற்கு இந்த படிவம் உதவி செய்யவில்லை.

8. புகைப்படம் ஒட்டுவதா, வேண்டாமா என்பது குறித்து இறுதியான பதில் 29.10.2025 கூட்டத்தில் சொல்லப்படவில்லை. மேலும், அரசியல் கட்சிகள் பாகம் வாரியாக முகாம்கள் நடத்தி நிரப்பிய படிவங்களுக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது அதற்கும் எந்த பதிலையும் கூறவில்லை. தற்போது வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 100 செலவழித்து புகைப்படம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது காரணமாகவே பல ஏழை வாக்காளர்கள் படிவத்தை நிரப்பாமல் போகிறார்கள். எனவே, முகாம்கள் நடத்தி தேர்தல் ஆணையமே புகைப்படம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

9. இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கும் போது பெயர் மற்றும் உறவினர் பெயரில் ஏற்கனவே பிழையாக இருந்து தற்போது பிழைகள் திருத்தப்பட்டால் அந்த படிவத்தை இணையதளம் ஏற்றுக் கொள்வதில்லை. இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் பெயருக்கு பின்னூட்டமாக சாதிப்பெயர் நிரப்பப்பட இயலாததால் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணி நிமித்தமாக சென்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

10. மலைவாழ் மக்கள் வாழக்கூடிய மலைப்பகுதிகளில் படிவங்கள் கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்திருக்கின்றன.

11. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு படிவத்தில் உள்ள விபரங்களை புரிந்து கொண்டு விளக்குவதில் உள்ள சிரமம் காரணமாக படிவங்களை கொடுத்து வாக்காளர்களை எழுதி சமர்ப்பிக்கச் சொல்லுகிறார்கள். வாக்காளர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இந்த படிவங்களை நிரப்புவது சிரமம். எனவே, படிவங்கள் நிரப்பி வழங்கப்படுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.