முரசொலி இதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
"முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் கலைஞர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக முரசொலி பத்திரிகைக்கு பங்களிப்பு செய்தவர் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி நாளிதழில் ஏராளமான அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியவர். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சாசனம் ஆகியவற்றை பாதுகாக்கவும், மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் தனது எழுத்துக்கள் மூலம் உறுதியாக போராடியவர். துணிச்சல்மிக்க எழுத்தாளர், கட்டுரையாளர், அதிர்ந்து பேசாத பண்பாளர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், ஜனநாயக இயக்கத்திற்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் முரசொலி செல்வம் அவர்களது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக அணிகளுக்கும் முரசொலி நிறுவன ஊழியர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.