கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்து சிபிஎம் தொடுத்த வழக்கில் மறுஉத்தரவு வரும் வரை கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகள், இயக்க கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார், அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தோம்.
அந்த வழக்கில் இரண்டு நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும், கட்சி கொடி கம்பம் குறித்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்கள். அதனை தொடர்ந்து இன்று (22.7.2025) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், விஜயகுமார், எஸ்,சௌந்தர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட முக்கிய வழக்கு என்றும், பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையில் முக்கிய அம்சமாக கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்துவதில் கொடி கம்பங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தனி நீதிபதி அரசியல் அமைப்பு உரிமையை கருத்தில் கொள்ளாமல், பிறப்பித்த உத்தரவு சட்டபடி நிலைக்கத்த தக்கதல்ல என்றும், மேலும் இப்படிபட்ட உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டிருக்க வேண்டுமெனவும், எனவே இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு பத்திரிகைகளில் பொது விளம்பரம் வெளியிட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வருகிற 25.7.2025 அன்று தலைமை செயலாளர் பிரபலமான இரண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு வெளியிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கருத்துகளை சொல்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அதோடு மட்டுமல்லாமல் 5.8.2025க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் பாதிக்கபடுவதாக கருதினால் அவர்கள் இடையீடு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வழக்கு விசாரணையை 6.8.2025ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்றும் அதுவரை தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எந்தகொடிக்கம்பங்களும் அகற்றபடக் கூடாதென இடைக்கால உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த இந்த இடைக்கால உத்தரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நீதிமன்றத்தில் நடத்தி வரும் போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும். இதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், வழக்குரைஞர் திருமூர்த்தி உள்ளிட்ட வழக்குரைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.