சென்னை:
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார்.மதுரை வடபழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. அதனை ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் தலைமையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் வெள்ளியன்று (ஜூலை 31) ஆய்வு செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரிய புள்ளான், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு பின் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை. ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், விரைவில் குணமடைந்து விடலாம். உரிய வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தை (கோவிட் கேர் சென்டர்) பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவும் இருந்து வருவது ஆறுதலான விஷயமாகும்.மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 21 கோவிட் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் ஏற்கனவே வேளாண்மை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை மற்றும் போலீசாருக்கான கோவிட் கேர் சென்டர் என 5 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
தற்போது கல்லூரிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தால் மாற்று ஏற்பாடாக தகவல் தொழில் நுட்பத்துறை (எல்காட்) வளாகத்தில் 900 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது.தென் தமிழகத்தின் தலைநகராக இருக்கும் மதுரையில் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி வருகின்ற 6-ந் தேதி (வியாழக்கிழமை) நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார். மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகளை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 591 படுக்கைகளும் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் 4,000 படுக்கைகளும் தயார்நிலையில் உள்ளன.
மதுரை மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. 7 ஆயிரத்து 590 தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 533 பேர் கலந்து கொண்டனர். அதில் 35 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தொடர் நடவடிக்கைகள் காரணமாக மதுரை மாவட்டம் தற்போது பாதுகாப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.