tamilnadu

img

தொடர் மழை: போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தல்

தொடர் மழை, புயல் காரணமாக  கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தி, முதற்கட்ட நிவாரணம் அறிவித்திட வேண்டுமென மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை வேகப்படுத்த வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பெருமளவு பாதித்துள்ளது. சில இடங்களில் 80% வரை பாதிப்பு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் இதே போல விவசாயம் பாதித்துள்ளது.

மீனவர்கள், புயல் காரணமாக வலைகள் அறுந்தும், படகுகள் சேதமாகியும் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். வீடுகள் உடைமைகளை இழந்திருப்பதுடன், வருமான வாய்ப்புகளும் அற்றுப் போயுள்ளார்கள்.

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தங்கள் குடிசைகளிலும், காரை வீடுகளிலும், தொகுப்பு வீடுகளிலும் நீர் புகுந்ததால், உடைமைகளை இழந்தும் வீடுகள் பழுதாகியும் இழப்புகளை சந்தித்துள்ளார்கள். தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளதால் அவை பலவீனமாக உள்ளது பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் சுனாமி பாதிப்பை ஒட்டி கட்டித்தரப்பட்ட வீடுகளும் இந்த தொடர் மழையால் சேதமாகியுள்ளன. பல நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கும் கூடுதலாக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட நிவாரணம்

பாதிப்புகள் கடுமையாக உள்ள நிலையில்  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முதற்கட்ட நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.  தண்ணீர் புகுந்த ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 10 ஆயிரம், வேலை, வருமானம் இழந்திருக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம், உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்.  மீனவர்களின் வருமான இழப்பும், வாழ்வாதார கருவிகளின் சேதமும் உடனடியாக கணக்கிடப்பட்டு விரைவான உதவி மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், விரைவாக வழங்கிட வேண்டும். தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டித்தர வேண்டும்.

கரம் கோர்ப்போம்

புயல், மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நிவாரண நடவடிக்கைகளில் கரம் கோர்க்க வேண்டுமென மாவட்டக் குழுக்களையும், கிளைகளையும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மீட்பு தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக முடிந்த உதவிகளைச் செய்வதுடன், அரசின் உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று துயரத்திலிருந்து மீண்டு வர உதவிட வேண்டும்.

ஒன்றிய அரசு உதவிடுக

நீண்ட கடல் எல்லை கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ச்சியாக காலநிலை சார்ந்த பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் மோடி அரசாங்கம், இந்த பாதிப்புகள் மீது பாராமுகமாகவே இருப்பது கண்டனத்திற்குரியதாகும். இதனால் பேரிடர்களின் அனைத்து பொருளாதார சுமைகளையும், மறுகட்டமைப்பு பணிகளையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, பேரிடர் நிவாரண நிதியில் மாநில அரசின் பங்கை முழுமையாக தருவதுடன், ஒன்றிய அரசின் நிதியிலிருந்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். 16 ஆவது நிதி ஆணையத்தின் முன் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, காலநிலை சார்ந்த அளவுகோலையும் நிதிப் பங்கீட்டில் இணைத்திட வேண்டும் என சிபிஎம் மாநில செயற்குழு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.