tamilnadu

ஸ்டான் சுவாமி, மதுரை ஆதீனம் மறைவுக்கு பேரவையில் இரங்கல்....

சென்னை:
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவையில்  பட்ஜெட்  கூட்டத்தொடர் திங்களன்று (ஆக.16) காலை 10 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் குறிஞ்சிப்பாடி தங்கராசு, ஆண்டிமடம் க.ந. ராமச்சந்திரன், பெரியகுளம் கே.பண்ணை சேதுராம், தஞ்சை மற்றும் திருவாரூர் திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அய்யாறு வாண்டையார், நன்னிலம் கலையரசன், திண்டிவனம் ராமமூர்த்தி முன்னாள் அமைச்சர்கள் அரக்கோணம் விஜயசாரதி, மருங்காபுரி செங்குட்டுவன், ஆர்கேநகர் மதுசூதனன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தந்தைபெரியாரின் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்தி, சமூக நீதி பாதையில் பணித்து பொதுத் தொண்டாற்றியவர், மார்க்சிய, பெரியாரிய பொது உடமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரபில நிபுணர் மருத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மக்கள் சேவையாற்றி வந்தவருமான எஸ். காமேஸ் வரன், தமிழையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவரும் இலக்கண பெருமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை பண்பாட்டை தமிழர்களின் இல்லங்கள் தோறும் நிலை நிறுத்திட தொடர்ந்து பாடுபட்டவருமான தமிழ் அறிஞர் ஐயா இளங்குமரனார், மதுரை ஆதின பீடாதிபதி அருணகிரி நாதர்.பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடியவரும் சமூக தொண்டாற்றுவதில் மிகுந்த அக்கறைகொண்டவரும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்களின் பாதுகாப்பு நல்வாழ்வு மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவருமான ஸ்டேன்சுவாமி. ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப் பட்டது. பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு மணித்துளிகள் அஞ்சலி செலுத்தினர்.