tamilnadu

img

தோழர் மைதிலி சிவராமன் மறைவு.... உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பு... விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல்....

சென்னை:

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் மறைவு விளிம்புநிலை மக்களுக்குநேர்ந்த  பேரிழப்பாகும்! அவருக்கு எமது அஞ்சலியையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்று, தில்லியிலும் பின்னர் அமெரிக்காவிலும் மேல்படிப்பை முடித்த அவர், சிலகாலம் ஐநா சபையில் பணியாற்றினார்.அமெரிக்காவில் அவர் பணியாற்றியபோது தலைமறைவாக கியூபாவுக்குச் சென்று அங்கே நடைபெற்று வந்த சோஷலிச கட்டுமான நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்த அனுபவம் அவருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாக இருந்தது. 1960 களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற சிவில் உரிமைகளுக்கான ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் போராட்டங்களும், வியட்நாம் யுத்தத்திற்கு எதிரான கிளர்ச்சிகளும் அவரை பொது சேவையில் ஈடுபடுமாறு தூண்டின.அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இந்தியாவுக்கு திரும்பிய மைதிலி சிவராமன் அவர்கள்,  முதலில் ஆச்சாரியா வினோபா பாவேவின் பூதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு பீகாருக்கு சென்றார். அங்கே வினோபா ஆசிரமத்தில் இருந்த கடுமையான நடைமுறைகளும், பூதான இயக்கம் தன்னுடைய இலக்கை எட்டுமா  என்கிறசந்தேகம் எழுந்ததாலும் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.

கீழ்வெண்மணியில் தலித் மக்கள் 44பேர் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பூதான இயக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள்- ஜெகநாதன் தம்பதியருடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடனும்  நேரடியாகச் சென்று அங்கே பாதிக்கப்பட்டோரைச் சந்தித்தார்.தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தன் அவர்களின்  அறிமுகத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மைதிலி சிவராமன், பின்னர் அக்கட்சியின் தொழிற்சங்க இயக்கத்திலும்,  மகளிருக்கான இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.சாதியும் வர்க்கமும் இந்தியச் சூழலில் பின்னிப்பிணைந்து இருப்பதை நேரடியான கள அனுபவங்களின் மூலமாக உணர்ந்த மைதிலி சிவராமன், சாதி ஒழிப்பும் வர்க்க விடுதலையும் பிரிக்க முடியாதவைஎன்ற புரிதல் கொண்டவராக களப்பணிகள் ஆற்றினார்.

கீழ்வெண்மணி பிரச்சனை மட்டுமின்றி வாச்சாத்தியில் பழங்குடியினப் பெண்கள் பாதிக்கப்பட்ட நேரத்திலும் அதற்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மைதிலி சிவராமன். ஆங்கிலத்தில் அவர் எழுதிய சமூக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் தமிழகச் சூழலை வெளியுலகுக்கு கொண்டு செல்ல உதவின.  சிந்தனை, நடைமுறை என இரு தளங்களிலும் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்த தோழர் மைதிலி சிவராமனின் மறைவு உழைக்கும்
மக்களுக்குப் பேரிழப்பு. அவருக்கு எமது செம்மாந்த  வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்.