tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு நாள்....

1923ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம்நாள் பண்ணை அடிமை குடும்பத்தில் பிறந்த தோழர் பி. எஸ். தனுஷ்கோடிஎழுதப்படிக்கத் தெரியாதவர். ஆனால் பண்ணை வேலைக்குப் போகாமல் மற்ற வாலிபர்களையும் சேர்த்துக்கொண்டுகுடிசைப் பகுதிகளில்சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட அவருக்கு 1942ல் ‘ஜனசக்தி’ நாளிதழின் அறிமுகம் ஏற்பட்டது. பண்ணை அடிமைக்கு எதிராகக் களம் கண்டு வந்த தோழர் பி. சீனிவாசராவைப் பற்றி அறிந்ததனுஷ்கோடி தம்மை செங்கொடி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலப்பிரபுக்களுக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி சாணிப்பால் நிறுத்தம், வெண்மணி சம்பவம், என ஏராளமான நிகழ்வுகள் மற்றும் சிறைவாசம் என நெஞ்சை உருக்கும் பல்வேறு சம்பவங்களில் தனுஷ்கோடியின் அளப்பரிய பங்கு இருந்தது. 1964ல் தம்மை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 1962,1975 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார்.இவர் தலைஞாயிறு ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கினார். 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் காலமானார்.“உங்கள் வாழ்க்கையில் எதை பெருமையாக கருதுகிறீர்கள்?” என கேட்டபோது “எழுதப்படிக்க தெரியாத பண்ணை அடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக தலைநிமிரச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருப்பதையே பெருமைக்குரியதாக கருதுகிறேன்” என்றார். 

- பெரணமல்லூர் சேகரன்