tamilnadu

img

பாஜக அரசுகளின் வகுப்பு வெறிச் செயல்கள்.... சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்....

சென்னை:
கொரோனா பொது முடக்கத்தில் பாஜக அரசுகளின் வகுப்பு வெறி செயல்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தாக்குதல்களை உருவாக்கியிருக்கிறது. அதன் பாதிப்புகளிலிருந்து, இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு லட்சத் தீவின் பாரம்பரியங்களை அழித்து ஒழிப்பதிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவில் ஜனநாயக விரோதமாக அமல்படுத்துவதற்கு எடுக்கிற முயற்சிகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுமிக வன்மையாகக் கண்டிக்கிறது.  
நமது தேசத்தில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப் பட்டன, அதேபோல வேறுபட்ட கலாச்சார, பாரம்பரிய வாழ்க்கை முறைகளைக் கொண்ட பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் யூனியன் பிரதேசங்கள் செயல்படவும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது. 

ஆனால், பாஜக மொழிவழி மாநிலங்களையே  சிதைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை  செய்து வருகிற  நிலைமைகளில், யூனியன் பிரதேசங்களுடைய  மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு, சுற்றுச்சூழலை சிதைக்கிற வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. டையூ-டாமனில் துவங்கி இன்றைக்கு லட்சத்தீவில் நேரடியாக குஜராத்தில் அமைச்சராக இருந்த ஒருவரை நிர்வாக அதிகாரியாக நியமித்து லட்சத் தீவின் இயற்கை வளங்களை சிதைப்பதற்கும், அமைதியான வாழ்க்கையை சீரழிக்கும் முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். லட்சத்தீவில், இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களால் கடும் கண்டனத்திற்கு ஆளான பிறகும் பாஜக அரசாங்கம் மோடி தலைமையில் இந்த சீரழிவு வேலைகளை செய்து வருகிறது. குற்றமே நடக்காத ஒரு பகுதியில் குண்டர் சட்டத்தை கொண்டு வருவதும்,  பெரும்  தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்து வைத்திருக்கிற சிறந்த கட்டமைப்பை சிதைத்து இன்றைக்கு 10 சதவீதமான பேரை கொரோனா பாதிப்பிற்கு உள்ளாயிருக்கக்கூடிய அநியாய காரியங்களை மோடி அரசாங்கம் செய்துவருகிறது.

காஷ்மீரின் மாநில உரிமையை பறித்து, சிறப்பு உரிமைகளை பறித்து அந்த மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது போல, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் லட்சத்தீவையும் சீரழிக்கும் வேலையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இந்த காரியங்களை முற்றிலுமாக மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், இந்த காரியங்களை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியை  உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், அவரால் கொண்டுவரப்பட்ட அனைத்து தீய நடைமுறை களும் கைவிடப்பட வேண்டும்.அதேபோல, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவதற்கு  வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாகாமலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போதும் அவசர அவசரமாக 5 மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத அண்டை நாட்டினரின் பட்டியல்கள் தீர்மானிக்கப்பட்டு குடியுரிமை வழங்குவதற்கான பணிகளை மோடி அரசாங்கம் துவங்கியிருக்கிறது. சட்டத்துக்கு புறம்பான இந்த இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கையை  உடனடியாக கைவிட வேண்டும்.தேசத்தின் பெரும் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிற ஒரு சட்ட நடைமுறையை ஊரடங்கு காலத்தில் அநியாயமாக அமல்படுத்த முயற்சி எடுப்பது ஜனநாயக விரோத செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகால மசூதிகள்  இடிக்கப்பட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொரோனாவை காரணம்காட்டி எதிர்ப்புகளை மட்டுப்படுத்திக் கொண்டு இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி, இரண்டாந்தர பிரஜையாக அடிமைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கக்கூடிய பாஜக-மோடி அரசின் செயல்களை அனைத்து பகுதி மக்களும் கண்டிக்க முன்வர வேண்டும்.லட்சத்தீவின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், சிஏஏ-சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டுமெனவும், இந்தியா முழுவதும்இஸ்லாமியர்கள் மீதும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீதும் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்திட வேண்டும்.பாஜக அரசின் இச்செயல்களுக்கு எதிராகஅனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் எனவும் அனைத்துஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.