tamilnadu

img

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.....

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.  ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 16ஆவது பொதுத்தேர்தலில் 133 தொகுதிகளை வென்று திமுகஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, சட்டமன்றக்குழு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தன்னை ஆதரிக்கும் 133 எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்கவருமாறு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.

இதைத்தொடர்ந்து வெள்ளியன்று (மே 7 ) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.  பதவி ஏற்பு விழாவுக்காக மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்குத் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து கட்சிக்கொடி பொருத்திய காரில் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார்.வழியில் தொண்டர்கள் வாழ்த்துக்கோஷங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். சரியாக 8.55 மணிக்கு ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அறிமுகம்
மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.9 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார்.அப்போது தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தினார். பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

பதவிப்பிரமாணம்
தொடர்ந்து, விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மட்டுமே இருந்தனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தலைமைச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.முதலில் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். அப்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று ஸ்டாலின் தன்னுடைய உறுதிமொழியை தொடங்கினார்.

அவருக்கு பின் வரிசையாக 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற பின் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றவர்கள் பூங்கொத்து வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.  தனிமனித இடைவெளியும் முகக் கவசம் அணிவதுகட்டாயமாக்கப்பட்டது முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

தலைவர்கள்
பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தரப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபால், துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பார்வையாளர் குண்டுராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர்இரா.முத்தரசன், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், சரத்குமார்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, ஐபேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், உதயநிதி ஸ்டாலின்,மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, கவிஞர் வைரமுத்து, மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.