சென்னை:
கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் நிறைவேற்ற வேண்டிய கலை இலக்கிய சமூகத்தின் கோரிக்கை சாசனத்தை திங்களன்று (பிப்.22) சென்னையில் தமுஎகச வெளியிட்டது.கருத்துச் சுதந்திரம், கலை, இலக்கியம், நாடகம், திரைப்படம், கல்வி, பதிப்புத்துறை, ஊடகம், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகள், அரசு வழங்கும் விருதுகள், சமூகம் மற்றும் பண்பாடு என 15 அம்சங்களுடன் 50 கோரிக்கைகள் உள்ளடங்கியதாக அந்த ஆவணம் உள்ளது.
இதனையொட்டி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறியதாவது:
ஒரு கருத்தை வெளியிட்ட பின்பும், சுதந்திரமாக இருக்க வேண்டும். அதுதான் கருத்துச் சுதந்திரம். அதற்கான சூழல் தற்போது நாட்டில் இல்லை. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக, சமூக நீதிக்கு எதிராக, பெண்ணடிமைத் தனத்தை ஆதரித்து, மூடநம்பிக்கை பரப்பும் வகையில் பேசினால் ஆட்சியாளர்கள் அனுமதிக்கின்றனர்.ஆய்வறிஞர்கள் மற்றும் திரைப்படம், கதை, கவிதை, நெடுந்தொடர், இணையத் தொடர் போன்றவற்றில் கலைச் சுதந்திரத்தோடு முன்முயற்சி எடுத்தால் மனம் புண்படுவதாகக் கூறி அலைக்கழித்து, தேசத் துரோக வழக்கில் சிறையில் தள்ளுகின்றனர். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட நிபந்தனைப் பிரிவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் பலவீனமடையும்போது, ஆளுமைப் பண்பு குறையும்போது அரசு நிர்வாகம் மூர்க்கமடையும். அதை நாட்டுநடப்புகள் உணர்த்துகின்றன. கலை இலக்கியம் சார்ந்த புகார்களில் துறைசார்ந்த வல்லுநர்குழு அமைத்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
தமிழ் கட்டாயமாகட்டும்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு நடத்தினாலும் தமிழகத்தில் தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். மெட்ராஸ் ஹைகோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற வேண்டும். தொல்லியல் சான்றுகள் உள்ள மலைசார்ந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் வந்து வேலை செய்வதை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பெருமளவில் பணியமர்த்துவது போன்றவை உள்ளூர் வேலைவாய்ப்பை பறிக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது, வடமாநிலத்தவரை தமிழகத்தில் குடியேற்றம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனை தடுக்க வேண்டும்.
கலை இலக்கிய நிகழ்வுகள் நடத்த உள்ள நேரக்கட்டுப்பாட்டை நீக்குவதோடு, விடுமுறை நாட்களில் கல்வி நிலையங்கள், அரசுக் கட்டிடங்களில் நாடகங்களை நடத்த அனுமதிக்க வேண்டும், பெருநகரங்களில் கலையரங்குகள் அமைத்து குறைந்த வாடகைக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும், சீரணி அரங்கத்தை மீண்டும் அமைக்க வேண்டும், கலை இலக்கியம் சார்ந்த தளத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
நாட்டுப்புறக் கலைகளுக்கு பல்கலைக் கழகம்
நாட்டுப்புறக் கலைகளுக்கென்று தனிப் பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும். ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா அரங்கை தமிழ் சினிமாவின் ஆவண காப்பகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்ற வேண்டும், தமிழர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். வட்டார மொழி களஞ்சியத்தை அரசு உருவாக்க வேண்டும்.கலை இலக்கியம் சார்ந்து அரசு அறிவிக்கும் பரிசுகள், விருதுகள், நூலக ஆணைக்குழு, இயல் இசை நாடக மன்றம் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை தேவை. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, நலவாரியத்தில் உறுப்பினராக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். கேரள அரசைப் போன்று சர்வதேச புத்தகக் காட்சிகளை நடத்த வேண்டும். திரைப்படங்களுக்கு இணைய முன்பதிவுக்கான சேவைக்கட்டணம், உள்ளூர் வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை உள்ளது.தேர்தல் வாக்குறுதிகள் என்பதை வாக்காளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமாக அரசியல் கட்சிகள் கருத வேண்டும். அதனடிப்படையில் கலை, இலக்கிய, பண்பாட்டுத்தளத்தில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தை வெளியிட்டுள்ளோம். அவற்றை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொண்டு, ஆட்சி அமைப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும். பிற கட்சிகள் அவை நிறைவேற குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கூறுகையில், குறைவான வரிகளை கொண்ட திருக்குறளை, அதிகப்படியான ‘வரிகளை’ கொண்ட நிதிநிலை அறிக்கையில் பயன்படுத்துவது வன்முறை. முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையையே வெளியிடாமல் உள்ளனர். கீழடியில் மத்திய தொல்லியல் துறை, அகழ்வுப் பணியில் இருந்து விலகிக் கொண்டது. தற்போது மாநில அரசு அகழாய்வு செய்து வருகிறது. இதை மத்திய - மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வின்போது ஓவியர் மருது, திரைக்கலைஞர் பொன் வண்ணன், இயக்குநர் ராஜூமுருகன், பத்திரிகையாளர்கள் ஜென்ராம், மு.ஹாசிப், ஆர்.ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.