tamilnadu

சுழற்சி முறை கல்லூரி வகுப்புகளில் மாற்றம் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை, மே 17- தமிழகத்தில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் சுழற்சி முறையில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் செயல்பட்டு  வருகிறது. இந்த நிலையில் அந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக கல்லூரி கல்வி இயக்குனர் சி.ஜோதி வெங்கடேசுவரன், உயர் கல்வித்துறை முதன்மை செயலா ளருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் படிக்கும் பொருட்டு கல்லூரிகள் அமைந்துள்ள அந் தந்த பகுதி மாண வர்களின் வசதிக்கேற்ப சுழற்சி முறையில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சுழற்சி-1 வகுப்புகளும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுழற்சி-2 வகுப்புகளும் நடத்தப் பட்டு வந்தன.

இதனால் கிராமப்புற மாணவர் கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளா கின்றனர். மிக விரைவில் வகுப்புகள் தொடங்குவ தாலும், நேரம் தாழ்ந்து வகுப்புகள் முடிவதாலும் சிலர் உணவு உட்கொள்ள இயலாத சூழலில் சோர்வுடன் வகுப்பில் அமரும்நிலை ஏற்படுகிறது. சில மாணவிகள் ரத்தசோகை போன்ற  நோய்களுக்கு ஆட்படும் நிலை யும் நிலவுகிறது. மாணவர்களின் சிரமத்தை போக்கும் விதத்திலும் முழுமையான கல்விச் சூழலை  கல்லூரிகளில் ஏற்படுத்தும் வகையிலும் சுழற்சி-1, சுழற்சி-2 வகுப்புகள் நடைபெறுவதை ரத்து  செய்து, 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தவாறு அரசு கல்லூரிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த கருதப்படுகிறது.

ஒரே வகுப்புகளாக நடத்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப் படுகிறது. அதற்காக வகுப்பறை  கட்டிடங்கள், இருக்கைகள், மேசை, நாற்காலிகள் வாங்க ரூ.150 கோடியே 9 லட்சத்து 5 ஆயிரத்து 500 நிர்வாக ஒப்பளிப்பும், நிதி ஒதுக்கீடும் செய்து  ஆணையிட அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.