tamilnadu

img

பெண்களுக்கு எதிரான சாதிய, சமூக ஒடுக்குமுறைகளை கேள்விக்குள்ளாக்கியவர் தோழர் மைதிலி.... புகழஞ்சலி கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு....

 சென்னை:
ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான சாதியசமூக ஒடுக்குமுறைகளை கேள்விக்குள்ளாக்கி யவர் தோழர் மைதிலி சிவராமன் என்று புகழஞ்சலிக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியும் மூத்த தலைவருமான மறைந்த தோழர் மைதிலி சிவராமன் நினைவஞ்சலிக் கூட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக ஜூன் 9 புதனன்று காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிருந்தா காரத் பேசியதாவது: 

தோழர் மைதிலி சிவராமன் வர்க்க அரசியலில் ஒரு சார்பாக இருந்தார். வர்க்க அரசியல் ரீதியாக அனைத்து பிரச்சனைகளையும் தொழிலாளி வர்க்ககண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்தார். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் வெளியில் நின்றுகொண்டு அல்ல, அதற்கு முன்னே நின்று கொண்டு அந்த அரசியலை பயன்படுத்தி  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு எப்படி விடுதலையை பெற்றுத்தருவது என அவர் சிந்தித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான அநீதியை, சுரண்டலை அவர் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக முதலாளித்துவ சுரண்டல்முறையை தோழர் மைதிலி கேள்விக்கு உள்ளாக்கினார். இந்த முதலாளித்துவ உறவுகள்சமூக உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது,

முதலாளித்துவ அமைப்பு முறை ஆணாதிக்கத்தை எப்படி வலுப்படுத்துகிறது என்கிற அந்த இணைப்பை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அவரசக்கால நிலைக்கு பிறகு ஏராளமான பெண்கள் அமைப்புகளுக்கு வந்தார்கள். பல விஷயங்களில் இடதுசாரி கட்சிகளுக்கும்  பெண்கள்அமைப்புகளுக்கும் இடையே வாதப்பிரதி வாதங்கள் நடந்தபோதெல்லாம் மார்க்சிய சிந்தாந்த நிலையில் நின்று அதற்கான பதில்களையும் விளக்கங்களையும் கொடுப்பதில் தோழர் மைதிலி முக்கியமான பங்காற்றினார்.தீண்டாமை சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து அவர் ஆய்வு செய்தபோது தீண்டாமை கொடுமைகளும் தாக்குதல்களும் தலித் பெண்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அவர்  விரிவாக  ஆய்வு செய்தார். இதற்காகஆய்வுசெய்ய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 கிராமங்களுக்கு  தோழர் மைதிலியுடன் நானும் சென்றிருந்தேன்.  அப்போது அங்கு நிறைய கேள்வி
கள் கேட்கப்பட்டன. உதாரணமாக தலித் அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த பெண்கள் ஏன் எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேசமறுக்கிறீர்கள். ஏன்சாதிய ரீதியாக பிரச்சனைகளை அணுகுகிறீர் கள். பெண்களை சாதி ரீதியாக ஏன் பிரிக்கிறீர்கள்என்று கேட்டார்கள். அந்த கேள்விகளுக்கு உரியமுறையில் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவர் பதிலளித்தார்.

இதேபோல் தொழிலாளர் வர்க்கத்தில் பெண் தொழிலாளர் பிரச்சனையை பிரத்யேகமாக கவனிக்கவேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார். இப்படி அவர் சொன்னபோது நீங்கள் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக் கிறீர்களா என்ற கேள்வி தொழிற்சங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் வந்தது. அப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து உரிய முறையில்விளக்கம் அளித்தோம். அதில் தோழர்  மைதிலியின்பங்கு முக்கியமானது.  கட்சிக்கும்  வெகுஜனஅமைப்புகளுக்கும் ஊழியர்களை உருவாக்குவதி லும் அவர் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கினார்.தோழர் மைதிலி தனது சொந்த வாழ்க்கையிலும் வழக்கமான நடைமுறைகளை  கேள்விக்கு உள்ளாக்கினார். நடுத்தர வர்க்கப்பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும், பிரமாணப்பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எதை பேசவேண்டும் என்ற பிம்பத்தை அவர் தகர்த்தார். இதற்காக அவர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். 

மென்மையான குரலில் வலுவான கருத்து

தோழர் மைதிலி சிவராமன் மென்மையாக பேசக்கூடியவர். ஆனால் அவரிடமிருந்து வரும் விஷயம் மிக மிக வலுவான கருத்துக்களை கொண்டதாக  இருக்கும். எந்த நேரத்திலும் அவரது நேர்மை, கொள்கை அரசியலில் சமரசம் செய்து கொண்டதில்லை. அவருடைய வாழ்க்கை இணையர் கருணாகரனை பற்றி என்ன சொல்வது என எனக்குத்தெரியவில்லை. பெரும்பாலும் பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடிய வகையில் கருணாகரன் இருந்தார். தோழர் கல்பனா, தோழர் பாலாஜி என அனைவருமே தோழர் மைதிலியை கடைசிக்காலத்தில் பராமரிப்பதில் முக்கியமான  பங்கினை வகித்துள்ளனர். தோழர் என்.ராம் சொன்னதைப் போல மைதிலியின் வாழ்க்கை கொண்டாடப்படவேண்டியது, அதிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.தோழர் மைதிலி சிவராமன் மறைவுக்கு செவ்வணக்கத்தை செலுத்துவதோடு அவர் மறைந்துவிட்டாலும்  சுரண்டல், ஒடுக்குமுறை, அநீதியை எதிர்க்கிற,  சோசலிசம் வரவேண்டும் என்று விரும்புகிற அனைவரது இதயங்களிலும் அவர் என்றென்றும் வாழ்வார்.இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.

                                         **************

தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் காரணகர்த்தா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் பேசுகையில், தோழர் மைதிலி சிவராமன் தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்லாமல்  ஒரு சம்பவத்தின் பின்னணியில் உள்ள சமூக, அரசியல், பண்பாடு தொடர்பாக வரலாற்று ரீதியாகஎடுத்துச்சொல்லும் பணியே அவரது  இதழியல் பணியாக இருந்தது. இது அவருக்குள்ள சிறப்பு என்றார்.

சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில் தோழர் மைதிலிஉறுதியான மார்க்சிஸ்ட். எடுத்த கடமையை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வார். அர்ப்பணிப்புமிக்க தோழர். ஏழைப்பெண்களுக்காக துடிக்கக்கூடிய அவரது மனம், காவல்துறை, முதலாளிகளிடம் பேசும்போது கடுமையாக இருக்கும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை பேசுகையில், 1985 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்துகிறேன் என்ற போர்வையில் அதிமுக அரசு மீனவர்களின் படகுகளை அகற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ,மீனவப்பெண்களிடம் இளம் வழக்கறிஞராக இருந்த நாங்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு ஆய்வுகளை சேகரிக்க சென்றபோது,.உண்மையான தகவல்களை சேகரிக்கவேண்டும், ஆர்வம் மிகுதி காரணமாக தவறுதலாகவோ, கூடுதலாகவோ எதையும் எழுதக்கூடாது என்று கூறி எங்களுக்கு வழிகாட்டினார்.

பெண் சிசுவதைக்கு எதிராக தோழர் மைதிலி மாநில அரசிடம் அளித்த ஆய்வறிக்கை அடிப்படையில்தான் தொட்டில் குழந்தைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. பன்முக ஆற்றல்படைத்த மைதிலி கடைநிலை ஊழியராகவும் பணியாற்றினார். ஒரு அறிவு ஜீவியாகவும் இருந்தவர். வாச்சாத்தி சம்பவத்தில் அவர் ஒருபுலனாய்வு நிருபராக செயல்பட்டு ஏராளமான தகவல்களை சேகரித்தார் என்றும் வைகை கூறினார்.

பத்திரிகையாளர் என்.ராம் பேசுகையில்,  தோழர் மைதிலியிடம் நேர்மை, நாணயம், உறுதிப்பாடு இருந்தது. வெளிநாட்டுப்பணி முடிந்து இந்தியா திரும்பியபோது, சீர்திருத்த பாதையா? புரட்சிப் பாதையா என அவர் யோசித்தபோது புரட்சிப்பாதையை தேர்வு செய்தார். 

உழைக்கும் மக்களுக்கு எதிரான அநியாயங்களை அவர் ஒருபோதும் சகித்துக்கொள்ளவில்லை. அவரது  எழுத்துக்களும் அதில் இடம்பெறும் கருத்துக்களும் வலிமையானது என்றார்.

எழுத்தாளர் வ.கீதா பேசுகையில், பெண்ணிய சிந்தனையோடு அரசியலுக்கு வருவோருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் மைதிலி. தலித் மக்களின் வாழ்நிலையை களத்திற்கு சென்று எழுதியவர் அவர் என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசுகையில், ஆரம்ப காலத்தில்  என்னைப்போன்ற ஏராளமான இளம் பெண்களிடம் பெண்ணிய சிந்தனைகளை விதைத்தவர். என்னைப்போன்றஏராளமான பெண்களுக்கு ஆதர்ச சக்தியாக விளங்கியவர் மைதிலி என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்பி.சுகந்தி தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்உ.வாசுகி, பேராசிரியர்கள் அ.மங்கை, ஆர்.சந்திரா,  பாரதி, கல்பனா, இந்திய தேசிய மாதர் சம்மேளன நிர்வாகி பத்மாவதி, ஜனநாயக  மாதர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினாஉள்பட பலர் தோழர் மைதிலி சிவராமன் பணிகளை குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினர்.

தொகுப்பு  : அ.விஜயகுமார்