சென்னை:
அரசின் நிரந்தர வழிகாட்டும் விதிமுறை அடிப்படையில் பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும். தொழிலாளர்களது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் அடிப்படையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொடர்ந்து நோய் பரவல் அதிகமாகி வந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் தீர்வு அல்ல. மக்களுக்கு அரசு நேரடியான பண உதவி அளிக்க வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். மக்களும் சிரமம் இன்றி ஊரடங்கு காலத்தை கழிக்க முடியும் என சிஐடியு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் பொருளாதார நிலை மோசமானது. மே 18ஆம் தேதி முதல் பொருளாதார நடவடிக்கைகளை இனியும் நிறுத்தி வைக்க முடியாது. மக்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்தன. கிட்டத்தட்ட அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் அனைத்து தளர்வுகளையும் அறிவித்துவிட்டு மாநிலஅரசு பொதுப் போக்குவரத்தை மட்டும் நிறுத்தி வைத்தது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கழகங்களும் பல்வேறு சிரமங்களை சந்திப்பதுடன் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் வேலைக்கு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே போக்குவரத்துக் கழக பேருந்துகளை கட்டுப்பாடுடன் இயக்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்என அனைத்து தொழிற்சங்கங்களாலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல்மாவட்டங்களுக்குள் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும்போக்குவரத்து இயக்கப்படுகிறது. தமிழக அரசு பேருந்து இயக்குவதற்கு என நிலையான வழிகாட்டுநெறிமுறைகளை (G0.N0.262 dated 31.05.2020) அறிவித்துள்ளது. அதன்படி பேருந்தில் கிருமிநாசினி தெளிப்பது உட்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு முகக்கவசம், பெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். பேருந்தில் ஏறும் பயணிகளுக்கும் முகக்கவசம் அவசியம். வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
போக்குவரத்துக் கழகங்களில் மேற்படி நிலையான வழிகாட்டும் விதிமுறைகள் (G0.N0.262 dated 31.05.2020) கடைப்பிடிக்கப்படவில்லை. பேருந்தில் 50 சதவீத பயணிகள் தான் ஏற்ற வேண்டும் எனில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கெனவே இயக்குவதை விட 2 மடங்கு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது போக்குவரத்து கழக நிர்வாகங்கள் சென்னை தவிர்த்து 50 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகளையே இயக்குகின்றன. இதன் காரணமாக நெரிசலான நேரங்களில் (PEAK HOURS) கொள்ளளவிற்கு அதிகமான பயணிகள் ஏறும் நிலை உள்ளது. இது அரசாங்கத்தினுடைய நோய் தடுப்பு நடவடிக்கைக்கு எந்த அடிப்படையிலும் பயன்படாது. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.கடந்த 6 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. பல பேருந்துகளுக்கு சாலை வரி கட்டாததினால் பேருந்து இயக்க முடியவில்லை. மேலும் கடந்த காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையும் அதிகமாக உள்ளதால் குறைந்தஅளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொழிலாளர்களிடமும் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் சுமார் 9 ஆயிரம் கோடியை நிர்வாகங்கள்செலவு செய்துவிட்டன. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓராண்டிற்கு மேலாக பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் பேச எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி.போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், போக்குவரத்து செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.கடந்த 4 ஆண்டுகளாக அரசு ஒப்புக் கொண்டதைநிறைவேற்றவில்லை. போக்குவரத்து கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு உரியநிதியை வழங்காதது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையான காரணம். இப்போது 50 சதபயணிகள் மட்டும் ஏற்றுவதால் ஏற்படும் இழப்பும் போக்குவரத்து கழகங்களால் தாங்க முடியாது. போக்குவரத்து கழகங்கள் தமிழக மக்களுக்கு சிறப்பாக சேவை அளிக்கும் பொதுத்துறை என்பதோடு தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்வில் முக்கிய பங்களிக்கும் நிறுவனமாகும். அரசு போதிய நிதி அளிக்காததால் போக்குவரத்து கழகங்களும் இதில் பணிபுரியும் ஒன்றேகால் லட்சம் தொழிலாளர்களும், 85 ஆயிரம் ஓய்வூதியர்களும் கடும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.எனவே இதன் அவசர அவசியம் கருதி அரசின் நிலையான வழிகாட்டுதல் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்கி அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக துறை செயலாளரை தொழிற்சங்கங்கள் தரப்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துறைசெயலாளரின் அணுகுமுறை போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கும் அடிப்படையில் இல்லை. மத்திய அரசின் தனியார்மய கொள்கையே அவரது மனநிலையாக உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.