வருமானவரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் நடத்திய சோதனை குறித்து திமுக தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மூன்று முறை தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய வரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான அதிமுக கூட்டணி படு தோல்வி அடையும் என்று வெளிவரும் சர்வே முடிவுகளும், மத்திய உளவுத்துறை அதிகாரிக ளின் அறிக்கைகளும் பிரதமர் மோடிக்கு எரிச்சலையும், ஏமாற்றத் தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆணவத்தின் உச்சகட்டமாக, பிரதமர் நேரடியாகத் தலையிட்டு திமுக மீது வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிட்டி ருப்பது காட்டுமிராண்டித்தனமானது. அதிகார துஷ்பிரயோகம். இந்த ஃபாசிஸ்ட் பாய்ச்சலையும், சேடிஸ்ட் சேட்டையையும் பார்த்து திமுக ஒருபோதும் ஓய்ந்துவிடாது. இது பனங்காட்டு நரி, இந்த வெற்று சலசலப்புக்கெல்லாம் நடுங்கி ஓடிவிடாது என்றும் தெரிவித்திருக்கிறார். மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது தப்பித்து விட முடியுமா என்ற நினைப்பில் கடைசி நிமிட வருமான வரித்துறை ரெய்டுகளை தி.மு.க.வின் மீதும், நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் மீதும் நடத்துகிறார்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்து அமைப்புகளையும் தன்னுடைய சட்டைப் பையில் போட்டு வைத்துக்கொண்டு, சாகசம் செய்து,தாறுமாறாகப் பயன்படுத்தி வெற்றிபெற்று விட வேண்டும் என்ற அதிகார வெறி அவர் தலைக்குச் சென்று கடைசிக்கட்டப் பேயாட்டம் போடுகிறது. ஒரு நாட்டின் பிரதமர் ஆணவத்தின் சின்னமாகவும், அகங்காரத்தின் உருவமாகவும்,சர்வாதிகாரத்தின் அடையாளமாகவும் மாறி ஊழிக் கூத்தாடுவது, இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு என்றும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலானஅமைச்சரவை மீது பல ரெய்டுகளை நடத்தி, பேரம் பேசி கூட்டணி வைத்து விட்டு, இப்போது தி.மு.க. பக்கம் திரும்பியிருக்கிறார் மோடி. மத்திய பாஜக அரசு ஒரு “காபந்து சர்க்கார்”! நேர்மையான அமைப்புகளாகச் செயல்பட வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளும் “எங்களுடன் கூட்டணிதான்” என்ற ரீதியில் மமதையுடன் தேர்தலை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு நினைப்பதும்- அதை தேர்தல் ஆணையம் செயலிழந்து வேடிக்கை பார்ப்பதும் ஆரோக்கியமானதும் அல்ல- அரசியல் சட்டத்திற்கு உகந்ததும் அல்ல! “காபந்து பிரதமரின்” தலைமையில் இயங்க தடை விதித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டிட இந்திய தேர்தல் ஆணையமே ஆராய்ந்து பார்த்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.