சென்னை:
“மடிக்கணினி வழங்கப்படாமல உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும் என்றும் ஈரோட்டிலும், மதுரையிலும் மடிக்கணினி கேட்டு போராடிய மாணவர்களை தாக்கி கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியமாணவர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.பி.கண்ணன், செயலாளர் மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: ஏழை,எளிய மாணவர்களுக்கும் கணினி பயன்பாடு கிடைத்திட வேண்டும் என்ற
நோக்கில் தமிழக அரசால் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2017-18, 2018-19 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கவில்லை. எனவே மாணவர்கள் மடிக்கணினி கேட்டு அரசிடம் முறையிடும் போது அவர்களை அழைத்து பேசாமல் காவல் துறையை கொண்டு தாக்கிகைது செய்துள்ளது கண்டிக்கதக்க நடவடிக்கையாகும்.
கடந்த 25ஆம் தேதி ஈரோட்டில் குமலன்குட்டை அரசுப் பள்ளியில் போராடிய மாணவர்களை தடிகொண்டு தாக்கியது மட்டுமல்லாமல் ஊடகவியலாளரையும் தாக்கியுள்ளனர். ஆளும் அதிமுக சட்டமன்றஉறுப்பினர் கே.வி.இராமலிங்கம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். தனது மகனைகொண்டு ஊடகவியலாளரையும் தாக்கியுள்ளார். அதே போல் மதுரையில் மங்கையர்கரசி பள்ளியில் போராடிய மாணவர்களை கடுமையாக தாக்கியதோடல்லாமல் இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வேல்தேவா மற்றும் சார்லஸ் ஆகியோரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பொய் வழக்கை புனைந்து ரிமாண்ட் செய்துள்ளது.
எம்எல்ஏ மகன் மீது நடவடிக்கை தேவை
சமீபத்தில் வெளியான அரசு ஆணை மற்றும் அரசு நிதிநிலை அறிக்கைகளில் 2017-18, 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடிசெலவிடப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் இதுவரை மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளபோது ஒதுக்கிய நிதியை தமிழக அரசு என்ன செய்தது என மக்கள் மத்தியில்வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.மாணவர்களையும், ஊடகவியளாலாளர்க ளையும் தாக்கிய ஈரோடு, மதுரை காவல்துறையினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் மற்றும் அவர் மகன் ரத்தன் பிரத்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும்.