காஞ்சிபுரம், ஏப்.23- சென்னை கடற்கரையில் இருந்துசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சுற்றுவட்டப் பாதையில் மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.சென்னை கடற்கரையில் இருந்துஅரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக ஒரு ரயில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வழியாகமற்றொரு ரயில் என இரண்டு ரயில்கள் சுற்றுவட்டப் பாதையில் திங்களன்று முதல் இயங்கத் துவங்கின. ரயில்வே துறையில் நாட்டிலேயே மிக நீண்ட தூரமுள்ள அதாவது 194 கி.மீ. சுற்றுவட்டப் பாதையாக இது அமையும்.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் -அரக்கோணம் இடையே இருந்தகுறுகிய பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதன்பின் ரயில் பாதையை மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.அரக்கோணம் - காஞ்சிபுரம் பிரிவில், மின்மயமாக்கல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணம் ஐஎன்எஸ்ராஜாளி கடற்படை விமான தள நிர்வாகம் தங்களது எல்லைக்கு அருகே ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்குத் தடை விதித்தது. இப்பாதை மின்மயமாக்கப்பட்டால் அதில் செல்லும் 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் தங்களது தளத்திலிருந்து விமானம் பறப்பதற்கும் இறங்குவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரக்கோணம் -தக்கோலம் இடையே 6.5 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கக்கூடாது எனவும் ஆட்சேபனை தெரிவித்தது.இதையடுத்து அங்கு மட்டும்மின்மயமாக்கல் பணி நிறுத்தப்பட்டது.
இதனால் தக்கோலம் வரைமின் மயமாக்கப்பட்டு செங்கல்பட்டுவழியாக சென்னை - திருமால்பூர்இடையே மட்டும் மின்சார ரயில்இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்துக்கு ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகம் தெரிவித்த ஆலோசனையின் அடிப்படையில் கல்லாறு பகுதியில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரையிலான 5 கிலோமீட்டர் பாதைக்கு பதிலாக, கல்லாறு பகுதியில் இருந்து பொய்ப்பாக்கம், பருத்திபுத்தூர், மேல்பாக்கம் வழியாக அரக்கோணம் ரயில்நிலையம் வரையுள்ள 9.8 கிலோமீட்டர் தூரத்துக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில், சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 12.30 மணிக்கு அரக்கோணம் வந்துசேரும். அங்கிருந்து 12.35க்கு புறப்பட்டு 1.15 மணிக்கு திருமால்பூர்,1.30க்கு காஞ்சிபுரம், 2.15க்கு செங்கல்பட்டு வந்தடையும். அங்கிருந்து 2.25க்கு புறப்பட்டு 3.15க்கு தாம்பரம், மாலை 4.10க்கு மீண்டும் சென்னை கடற்கரை வந்தடையும். அதேபோன்று, சென்னை கடற்கரையில் 9.50க்கு புறப்படும் மற்றொரு ரயில் 10.45க்கு தாம்பரம், 11.35 செங்கல்பட்டு சந்திப்பு வந்தடையும். அங்கிருந்து 11.40க்கு புறப்பட்டு 12.25க்கு காஞ்சிபுரம், பகல் 1 மணிக்கு திருமால்பூர்சென்று சேரும். அங்கிருந்து 1.20க்குபுறப்பட்டு 2 மணிக்கு அரக்கோணம் சந்திப்பு சென்றடையும். அங்கிருந்து 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு கடற்கரை சென்றடையும்.