அம்பத்தூர், ஏப். 24-சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர் (மேற்கு) ரயில் நிலையம் வரை மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர் பார்க்கின்றனர். வில்லிவாக்கத்தில் இருந்து, பாடி,அண்ணா நகர் மேற்கு வரை 7.29 கோடி ரூபாய் செலவில் பழைய ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டது. மேலும், குடிநீர், மின்விளக்கு, கழிவறை, டிக்கெட் கவுன்டர், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டது. இதையடுத்து இந்த பாதையில் சென்னை கடற்கரை -அண்ணாநகர் (மேற்கு) ரயில் நிலையங்களுக்கு இடையே 2003ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆறு பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.பாடி, அண்ணாநகர் பகுதிகளைச்சேர்ந்த மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு செல்ல இது வசதியாக இருந்தது. மேலும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்ல அண்ணாநகர் ரயில் நிலையத்தை பயன்படுத்தினர். பாடி, முகப்பேர் பகுதிகளை சுற்றி பல்வேறு நிறுவனங்கள் உள்ளதால், ரயில் மார்க்கமாக தொழிலாளர்கள் பாடி ரயில் நிலையத்திற்குவந்து அங்கிருந்து நிறுவனத்திற்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2007ஆம்ஆண்டு பாடி ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிதொடங்கியது. இதற்கு தூண்கள்அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மேம்பாலம்திறக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ரயில்போக்குவரத்து துவங்கப்படவில்லை. இதனால் மூடப்பட்ட அந்த 2 ரயில் நிலையங்களிலும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.ரயில் நிலையத்தில் இருந்த இருக்கைகள், மேற்கூரைகள் உடைந்துள்ளன. கழிவுறையும் பாழாகிவிட்டது. இந்த பாதையில்ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர். பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் சிரமம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே பாடி,அண்ணாநகர் ரயில் நிலையங்களை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமங்கலம் மொட்ரோ ரயில்நிலையம் பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே பாடி ரயில்நிலையத்தை திருமங்கலம் வரை நீட்டித்தால் மொட்ரோ இணைப்பு கிடைக்கும்.