சென்னை, ஜூலை 8- மும்பையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் இல்லமான “ராஜகிரகம்” மீது நேற்று(செவ்வாய்)இரவு சமூக விரோதிகள் இருவர் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை உடைத்துவிட்டு, வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.வீட்டிலிருந்த பூச்சாடிகளை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். சில நிமிட நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மட்டு மல்ல ராஜகிரகம் என்பது. புத்தகங்கள் வைப்பதற்காகவே கட்டப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் வீட்டின் ஒரு பகுதியில் அம்பேத்கரின் மருமகளும் பேரன்மார்கள் பிரகாஷ் அம்பேத்கர்,ஆனந்த ராவ், பீமாராவ் ஆகியோர் வசித்து வர வீட்டின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியம் செயல்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பெருமைகளான பல்லாயிரக் கணக்கான நூல்கள் அங்கே இருக்கின்றன. அத்தகைய ஒரு இல்லத்தின் மீது சமூகவிரோதிகள் நடத்திய தாக்குதலுக்கான காரணங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.