சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில செயலாளர் ப.மாரிமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடக்கோரி, தமிழகத்தில், இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் போராடி வருகிறார்கள். தேசிய குடிமக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்பு பணியை கைவிடக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கைவிட கோரி நடைபெறும் இயக்கத்தை காவல்துறை கொண்டு ஒடுக்கிவிட முடியும் என தமிழக அரசு நம்புவது கண்டனத்திற்குரியது. சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் அமர்ந்து இயக்கம் நடத்திய பெண்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மக்கள் மீதும் காவல்துறை தடியடி நடத்தி கலைத்துவிட தடியடி நடத்தியது. கடுமையான தாக்குதலால் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசின் காவல் துறையின் இந்த கொடுஞ்செயலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தடியடிக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்)கான பணியை தொடங்குவது இல்லை என்ற முடிவையும், தமிழகத்தில் என்.ஆர். சி, சி.ஏ.ஏ சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்ற தீர்மானத்தையும் நடைபெறுகிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.